பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/476

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
474
அறத்தின் குரல்
 

கொண்டிருப்பதைக் கண்ட துரியோதனன் மனம் பதைத்தான். இந்தக் கடோற்க்சனை இப்படியே விட்டு விட்டால் நம்முடைய படைகள் எல்லாவற்றையும் இருந்த இடம் தெரியாமல் செய்து விடுவான் போலிருக்கிறதே என்று எண்ணிக் கொண்டே துரியோதனன் கர்ணனை அருகில் அழைத்தான்.

“கர்ணா! இந்தக் கடோற்கசனை இவ்விநாடியிலேயே அழித்துத் தொலைக்காவிட்டால் நமக்குத்தான் ஆபத்து. நீ இந்திரனிடம் வேண்டிப் பெற்றுள்ள சக்தி வாய்ந்த வேலாயுதத்தை அவன் மேலே எறிந்து அவனை இப்போதே கொன்றுவிடு” -என்று காதருகில் இரகசியமாகக் கர்ணனிடம் துரியோதனன் கூறினான். இதைக் கேட்ட கர்ணன் உடனே இதற்குச் சம்மதிக்கவில்லை. கொஞ்சம் தயங்கினான்.

“கர்ணா! ஏன் தயங்குகிறாய்? இப்போது இரவு நேரம். இந்த இருட்டில்தான் நம்முடைய காரியத்தை முடித்துக் கொள்ள முடியும். இப்படியே விட்டுவிட்டால் பொழுது விடிவதற்குள் கடோற்கசன் நம்முடைய இனத்தை முழுமையாகத் தொலைத்து விடுவானே!”

“துரியோதனா! இவன் அரக்கன். இன்னும் சிறிது நேரத்தில் பொழுது புலர்ந்துவிடும். அப்போது இவனுடைய மாயாஜாலங்கள் பலிக்கமாட்டா. இவன் பொருட்டுச் சக்தி வாய்ந்த இந்த வேலை உபயோகிப்பது வீண் செயல். இந்திரனிடமிருந்து பெற்றுள்ள இந்த வேலை அர்ச்சுனனைக் கொல்வதற்காகவே வைத்துக்கொண்டிருக்கிறேன். இந்தச் சிறியவனின் உயிரைப் போக்குவதற்கு அவ்வளவு பெரிய ஆயுதம் வேண்டாம். சாதாரணமான அம்பு ஒன்றே போதும்.” - கர்ணன் இங்ஙனம் பலவாறு மறுத்தும் துரியோதனன் கேட்கவில்லை. எப்படியும் இந்திரனால் கொடுக்கப்பட்ட வேலைக் கடோற்க்சன் மேல் எறிந்து அவனைக் கொன்றேயாக வேண்டுமென்று வற்புறுத்தினான். கர்ணனும் அவனுடைய பிடிவாதத்திற்கு இணங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.