பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

476

அறத்தின் குரல்

விரட்டினான். அவ்வளவில் கிழக்கு வெளுத்து விட்டது! பொழுது புலரும் நேரம் நெருங்குவதை உணர்ந்து இருசாராரும் இரவு யுத்தத்தை நிறுத்தினர். இரவிலும் போர் செய்ய வேண்டுமென்று கூறிய துரியோதனனுக்கும் அவன் படைகளுக்கும்தான் அதிகமான சேதம் ஏற்பட்டிருந்தது. பாண்டவர்களுக்கு நிறைய அழிவை உண்டாக்கவே அவன் தீப்பந்தங்களைக் கொளுத்தி இரவுப் போர் செய்ய எண்ணினான். ஆனால் நடந்ததோ அதற்கு நேர்மாறாக அமைந்துவிட்டது. இரவுப் போர் முடிந்த சிறிது நேரத்திற்குள்ளேயே கதிரவன் உதித்துவிட்டதனால் பகற்போரையும் தொடங்கவேண்டியதாயிற்று. அவசர அவசரமாக நீராடிக் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு இருசாராருடைய படைவீரர்களும் பதினைந்தாம் நாள் போருக்காகக் களத்தில் கூடினார்கள். முதல் நாள் இரவு முழுவதும் உறங்காமல் போர் செய்த அலுப்பு இருந்தாலும் உற்சாகத்தோடு போரில் ஈடுபட்டனர். பதினைந்தாம் நாள் போர் ஆரம்பமாயிற்று. அர்ச்சுனனுடைய வில்லிலிருந்து வேகம் நிர்ணயிக்க முடியாத சூறாவளிபோல் அம்புகள் பாய்ந்தன. எதிரிகள் சாவதற்காகவே வந்தவர்களைப் போல் ஒவ்வொருவராக முன் வந்து அவன் அம்புகளைத் தாங்கி இறந்து கொண்டிருந்தனர். துரியோதனாதியர் படையைச் சேர்ந்த பாலவீமன், சோமதத்தன், என்ற இரு சிற்றரசர்களும் அர்ச்சுனனுடன் போரிட்டு மாண்டனர். அவர்களைப் போலவே இன்னும் பல மன்னர்கள் அர்ச்சுனன் கணைகளால் இறந்தொழிந்தனர். கௌரவர்கள் பக்கம் படைத் தளபதியாக இருந்த துரோணர் தன்னுடைய வில்லாற்றலை முழுக்க முழுக்க வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அவரை எதிர்த்துப் போர் செய்ய எந்த அரசர்களாலும் இயலவில்லை. வலிமை வாய்ந்த தேர்ப்படைகளைக் கொண்டிருந்தவனும் பாண்டவர் படையைச் சேர்ந்தவனுமாகிய குந்தி போஜராஜன் ஒருவன் மட்டும் தைரியமாகத் துரோணரை எதிர்த்துப் போர் செய்ய முன் வந்தான்.