பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

அறத்தின் குரல்


என இவ்வாறு ஒவ்வொரு வகையிலும் உன்னத நிலை பெற்றுத் தோன்றும் பாண்டவர்களை எதிர்த்துப் பொறாமை கொள்வது கெளரவர்களுக்கு எளிமையான இயல்பாகத் தோற்றியிருக்க வேண்டும். இந்த எண்ணத்தை தோற்றுவித்தவன் கர்ணன் வளர்த்து முதிரச் செய்தவன் சகுனி. இதன் விளைவு?... பாண்டவர்களை எந்தெந்த வழியில் எல்லாம் துன்புறுத்த முடியுமோ, அந்தந்த வழிகளிலெல்லாம் துன்புறுத்துவது என்ற பகைமை எண்ணம் கெளரவர் மனத்தில் எழுந்தது. ‘காளான்‘ ஒரே நாளில் முளைத்து வளர்ந்து முழு வளர்ச்சியும் பெற்று விடுகிறது. ஆனால் கடம்ப மரம் அப்படி வளர முடிகின்றதா என்ன? நல்ல எண்ணங்களைக் காட்டிலும் தீய எண்ணங்களே விரைவில் வளர்ந்து வளம் பெற்று விடுகின்றன. இது உலகியல்பு.

பாண்டவர்களின் முழு ஆற்றலும் பொருந்தி நிறைந்திருப்பது வீமனிடத்தில் தான் என்பதை நன்கு அறிந்து கொண்ட துரியோதனாதியர் தங்கள் சூழ்ச்சி வலையை எடுத்த எடுப்பில் வீமன் மேலே விரித்தனர். கெளரவர்கள் மனத்தில் அமைதியும் இன்பமும் நிரம்பியிருந்த ஒரு நாள் இது நிகழ்ந்தது. புயலை எதிர்பார்த்து நின்ற அமைதி அது! அழிவை எண்ணி இறுமாந்து கொண்ட இன்பம் அது! அவர்கள் பாண்டவர்களை அணுகி, “இன்றைய பொழுதை இன்பமாகக் கழிப்போம் ... கங்கையாற்றின் மனோரம்மியமான நீரலைகளில் நாம் நீந்தி விளையாடி மகிழலாம்! நீங்களும் வரவேண்டும் சோதரர்களே! என்று அன்பொழுகப் பேசுவது போல் நடித்து அழைத்தனர். வஞ்சகம் அறியாத பாண்டவர்கள் வருவதற்கு மனமிசைந்து கெளரவர்களோடு கங்கைக் கரைக்குப் புறப்பட்டனர். கங்கைக்கரை.. பனிமலைப் படிவங்களிலே தவழ்ந்து வளர்ந்து கன்னிப்பருவ மெய்திய கங்கைச் செல்வி கடலாகிய காதலனை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். மோகனமான நீள அலைக்கரங்களை நீட்டிப் பாவசரீரங்களை நீராட அழைப்பது போல இருந்தது, தன்னுடைய நீர்த்தரங்