பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/481

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
479
 

வீமனும் சண்டை செய்து கொண்டிருக்கும் போது வீமன் மாளவனுடைய யானையைக் கொன்று விட்டான். அதிர்ஷ்ட வசமாக அந்த யானையின் பெயரும் ‘அசுவத்தாமன்’ என்பதுதான். துரோணருடைய புதல்வன் பெயரும் மாளவமன்னனுடைய பட்டத்து யானையின் பெயரும் ஒன்றாக இருப்பதனால் நமக்கு ஒரு செளகரியம் இருக்கிறது. “வீமன் அசுவத்தாமாவைக் கொன்று விட்டான்” என்று நீயே இரைந்த குரலில் கூறிவிடும். அதைக் கேட்ட துரோணர் தன் மகனாகிய அசுவத்தாமன் இறந்து விட்டதாக எண்ணி மகனை இழந்த துயரத்தால் வருந்திப் பேசாமல் மலைத்து நின்றுவிடுவார். அவர் மலைத்து நிற்கும் அந்த சமயத்தில் துட்டத்துய்ம்மன் அம்பு எய்து உயிரைப் பறித்து விடுவான். யோசிக்க நேரமில்லை. உடனே நான் கூறியபடி செய். இது பொய்யும் ஆகாது. ஓரளவு உண்மை பேசுவது போலத்தான் ஆகிறது!” - கண்ணன் கூறிய சூழ்ச்சியைக் கேட்டு மனம் மயங்கிய தருமன் முதலில் அதற்கு இணக்க மறுத்தான்.

“தருமா! தயங்காதே. முதல் நாள் போரில் துரோணரே தன்னை வெல்லுவதற்குரிய தந்திரமாக இதனைத் தானே கூறியிருக்கிறார்? தவிர நீ செய்கிற காரியத்தால் துரோணருக்கு வஞ்சகம் செய்வதாக நீ நினைக்காதே. துரோணருடைய சீடனாகிய நீ அவர் மரணத்தின் மூலமாக மோட்சத்தை அடைவதற்குக் கூடவா உதவி செய்யக்கூடாது?” - கண்ணன் மீண்டும் தருமனை நோக்கிக் கூறினான்;

“பரமாத்மாவின் அம்சமாகிய நீயே இப்படிக் கூறலாமா? பொய் சொல்லிப் பெற்ற வெற்றியினால் தானா நான் இந்த உலகத்தை ஆளவேண்டும்? குருவிடம் வஞ்சகம் செய்து பெறும் வெற்றி எனக்கு வேண்டாம். கல்வி, செல்வம், பாசம், உறவு, அன்பு யாவற்றையும் அழித்தொழிக்கக் கூடிய பொய்யை நான் சொல்ல மாட்டேன்” தருமர் இவ்வாறு கூறவும், கண்ணன் மேலும் சில நியாயங்களைக் கூறி அவன் மனத்தைத் தெளிவடையச் செய்ய முயன்றான்.