பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/482

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
480
அறத்தின் குரல்
 


“தருமா! நன்மையைத் தருமானால் பொய்யைத் கூறுவதும் மெய் கூறுவது போலவே ஆகும். நன்மைக்காகப் பொய் சொல்லலாம் என்பதை நம்முடைய அறநூல்களே விளக்குகின்றன. தீமையைக் கொடுக்கின்ற உண்மையைக் கூறினால் அது பொய்க்குச் சமம். நன்மையைக் கொடுக்கின்ற பொய்யைக் கூறினால் அது மெய்க்குச் சமம். சகல நியாயங்களையும் உணர்ந்து கொண்டு நீதியும், நியாயமும் நிலவுவதற்குக் காரணமும் காரியமுமாக விளங்குகிற நான் சொல்வதில் கூடவா உனக்கு நம்பிக்கை இல்லை? அன்றியும் தன்னைச் சூழ்ச்சியால் வென்று கொள்ளலாம் என்று அனுமானித்து அதற்குரிய வழியையும் துரோணரே உனக்குக் கூறியிருக்கிறாரே! துருபத மன்னன் சொன்ன சொல் தவறி அவமானப் படுத்தியதற்காக அவனைப் பழி வாங்க வேண்டும் என்று தானே துரோணர் இல்லற வாழ்வையே மேற்கொண்டார்? அவருடைய வாழ்வின் இலட்சியமான அந்தப் பழி வாங்குதல் தான் இனிது நிறை வேறிவிட்டதே! இனிமேல் துரோணருக்குக் கிட்ட வேண்டிய இலட்சியம் ஒன்றே ஒன்றுதான். அந்த இலட்சியம் தான் அவர் பரமபதம் அடைய வேண்டியதாகும். உன் வாயால் நான் கூறிய இந்தப் பொய் போன்ற மெய்யை ஒரே ஒரு முறை கூறினால் துரோணருடைய பரமபத இலட்சியமும் அவனுக்கு இப்போதே கிடைத்துவிடும். ஆகவே மறுக்காமல் தயங்காமல் இப்போதே நான் கூறியபடி செய்.” கண்ணன் இவ்வளவு தெளிவாகக் கூறிய பின்பே துரோணர் காதில் விழுமாறு அதைச் சொல்ல இணங்கினான் தருமன்.

“அசுவத்தாமன் என்னும் ஆண்மையிற் சிறந்த யானையை வீமன் என்னும் பலம் பொருந்திய சிங்கம் கொன்றுவிட்டது!” என்று துரோணருடைய செவிகளில் தெளிவாகக் கேட்குமாறு தருமன் உரத்த குரலில் கூறினான். இச்சொற்களைச் செவியுற்ற துரோணர் தன் மகன் அசுவத்தாமனைத்தான் வீமன் கொன்றுவிட்டானென்று எண்ணிக் கொண்டார். உடனே நெஞ்சங் கலங்கி வலது