பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

483

வீமனை நெருங்கும் போது நூற்றுக் கணக்கான அஸ்திரங்களாகப் பெருகி அவனை மிரளச் செய்தது. ஒரு கணம் சற்றே மிரண்டாலும் அடுத்த விநாடியே தன்னைச் சமாளித்துக் கொண்டான் வீமன். தன் கையிலிருந்த வில்லினால் பல அம்புகளைத் தொடுத்து நாராயணாஸ்திரத்தையும் அதில் தோன்றிய கிளை அஸ்திரங்களையும் துண்டித்து எறிந்தான், தோல்வியினால் முடக்கப்பட்ட நாராயணாபதிரம் திரும்பி வந்து பயனற்ற பொருளாக அசுவத்தாமனையே அடைந்தது. தோல்வியடைந்த உள்ளம் எரிமலைபோல குமுறியது. நாராயணாஸ்திரத்தை விட வலிமையான பாசுபதாஸ்திரத்தைக் கையிலெடுத்தான் அசுவத்தாமன். அதை அவன் வில்லில் தொடுத்து எய்வதற்காக வளைத்தபோது, சற்றும் எதிர்பாராத விதமாக வியாச முனிவர் அவன் முன்பு தோன்றினார்.

“அசுவத்தாமா! நிறுத்து.” முனிவரின் குரல் அவன் கைகளைக் கட்டிப்போட்டது.

“சுவாமி, வணங்குகிறேன்! தங்களுடைய எதிர்பாராத வரவின் பொருள் அடியேனுக்கு விளங்கவில்லையே?” அசுவத்தாமன் வியாச முனிவரை வணங்கிக் கூறினான்.

“அசுவத்தாமா? இன்றைக்கு ஏன் உனக்கு இவ்வளவு கோபம்? உன் தந்தை இறந்துவிட்டார் என்பதற்காகத் தானே? ஆத்திரத்தைத் தணித்துக்கொள். வில்லை மடக்கிவை. உன் தந்தை இறந்தார் என்றால் அதற்கு இவர்களுடைய சூழ்ச்சி மட்டும்தானா காரணம்? துருபத மன்னன் துட்டத்துய்ம்மனைப் பெறுவதற்காக யாகம் செய்த போதே உன் தந்தையின் மரணத்துக்கும் வரம் பெற்று விட்டான். துட்டத்துய்ம்மன் கையால்தான் உன் தந்தை இறக்க வேண்டுமென்று நியதி. இறப்பு மனிதனுக்கு இயற்கை விதிப்படி நேருவது. அதற்கு யாரும் எப்போதும் காரணமாக முடியாது. இதை நீ அறியாதவன் அல்லவே? இவர்களைப் பாசுபதாஸ்திரத்தை எய்து விட்டதனால் உன் தந்தைக்குத் திரும்ப உயிர்