பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/487

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
485
 

புலர்ந்தது. பதினாறாம் நாள் போர் தொடங்குவதற்குரிய நேரமும் வந்தது. கௌரவர்கள் படையைக் கர்ணனும், பாண்டவர்கள் படையைத் துட்டத்துய்ம்மனும் போர்க்களத்தில் அணிவகுத்துத் தலைமை தாங்கிக் கொண்டு வந்து நிறுத்தினர். கர்ணனுடைய படை வீரர்கள் மகரமீனைப் போன்ற வியூகத்திலும், துட்டத்துய்ம்மனுடைய படை வீரர்கள் சக்கரவியூகத்திலும் நின்றனர். விரைவில் இருசாரார் படைகளும் கலந்து போரில் ஈடுபட்டன. அன்றைய போரில் அத்தனை நாளும் ஏற்படாத ஓர் ஆசை வீமனுக்கு ஏற்பட்டது. அதுதான் யானை மேலேறிப் போர் செய்ய வேண்டும் என்ற ஆசை. அதனால் அவன் ஒரு பெரிய யானை மேல் ஏறிக் கொண்டு போருக்குத் தயாராக இருந்தான். அப்போது காசிமன்னனான ‘கோமதூர்த்தி’ ஒரு யானைமேல் ஏறித்தயாராக இருந்த வீமனுடன் போருக்கு வந்தான். இவருடைய யானைகளும் கொம்போடு கொம்புகள் மோதிப் போர் செய்தன. யானை மேலிருந்தவர்களும் யானைகளுமாக மோதிக் கொண்டு போர் செய்த அந்த நிலை இருகுன்றுகள் முட்டி மோதிக் கொள்வது போல் காட்சியளித்தது.

{வியாச பருவம் முற்றும்)