பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

47


கங்களால் அவள் செய்து கொண்டிருந்த சலனம். கெளரவர்களும் பாண்டவர்களும் நீர் விளையாடலுக்காக நதியில் இறங்கினார்கள்.

தொடக்கத்திலேயே துரியோதனனுக்கும் வீமனுக்கும் நீந்துவதில் போட்டி ஏற்பட்டது. தங்களுக்குள் செய்து கொண்டிருந்த ஏற்பாட்டின் படி பாண்டவர்களை அன்று எப்படியும் துன்பமும் அவமானமும் அடையும் படி செய்ய வேண்டும் - என்று முனைந்தனர் துரியோதனாதியர். சுழித்துச் சுழித்து ஓடிய கங்கை நங்கை அவர்களுடைய இந்த நிறைவேற முடியாத முயற்சியைக் கண்டு தனக்குள் மோனப் புன்னகை செய்து கொண்டிருப்பது போலத் தோன்றியது. விதி என்பதோ அல்லது இயற்கை என்பதோ, தவறிக் கூட அநீதிக்குத் துணை செய்வதில்லை. நீதிக்கும் அநீதிக்கும் கங்கையாற்றிலேயே ஒரு போராட்டம் ஏற்பட்டுவிட்டதோ? என்று சொல்லும்படி வெகுநேரம் கெளரவர்களும் பாண்டவர்களும் ‘நீந்துதல்’ என்ற போரை நடத்தினர். தீர்ப்புச் சொல்ல வேண்டிய நீதிபதியைப் போல அமைதியாக இந்தப் பொறாமைப் போரைக் கண்டுகொண்டிருந்தாள் கங்கை நங்கை. உலகில் அறத்தின் துணை யார் பக்கமோ அங்கே தான் வெற்றியின் துணையும் இருக்கும். அவமதிப்பைச் செய்ய நினைத்தவர்கள் அவமதிப்பை அடைந்தார்கள். தோல்வியைப் பாண்டவர்களுக்கு உண்டாக்கத் திட்டமிட்டவர்கள் தாமே அதை அடைந்தனர். வீமனைத் தலைகுனியச் செய்ய வேண்டும் என்று கருதிய துரியோதனன் தானே தலைகுனியும்படி ஆகியது.

பொறாமைக்காரர்களின் தோல்வியால் பொறாமை தானே வளரும்? கங்கைக் கரையில் நீர் விளையாட்டு முடிந்ததும் யாவரும் பசி தீர உண்டனர். பின் ஓய்வு கொண்டனர். மாலையில் மாளிகைகளுக்குத் திரும்பினர். துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி என்னும் நால்வருக்கு மட்டும் தோல்வியால் விளைந்த மனத் தவிப்பு அடக்க முடியாமல் குமுறிக் கொண்டிருந்தது. இருண்டு