பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/491

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
489
 

காலட்களும் கணக்கின்றி இறந்து விழுந்தனர். போர்க்களம் ‘இது இரத்தசமுத்திரமோ?’ எண்றெண்ணி அஞ்சும் அளவிற்குப் பயங்கரமாக மாறிவிட்டது. தருமன் துரியோதனனுடைய வில்லை அறுத்துத் தேரை அச்சு முறிந்து விழச் செய்தான். தேரோட்டியையும் கொன்று விட்டான். துரியோதனன் கையில் ஆயுதமின்றி நிற்கத் தேர் இன்றித் தரையில் அனாதரவாக நின்றான். அங்கே இங்கே ஓடிவிட முடியாமல் தருமனும் தருமனுடைய படை

“துரியோதனா! வெறும் சதுரங்கக் காய்களை வைத்துக் கொண்டு விளையாடும் சூது விளையாட்டு அன்று இது. இங்கே சூழ்ச்சியும் வஞ்சகமும் பலிக்க மாட்டா. உண்மையான வீரம் இருந்தால்தான் இங்கே வெற்றி பெற முடியும். உன்னைப் போன்றவர்களுக்கு உண்மையான வீரம் இருக்குமென்று நான் நம்பவில்லை. இதோ அனாதையைப் போல் எனக்கு முன்னால் நிற்கிறாய். நான் நினைத்தால் ஒரேயொரு அம்பினால் உன்னைக் கொன்றுவிட முடியும். ஆனால் நான் உன்னைக் கொன்றுவிட்டால் ஏற்கெனவே உன்னைக் கொல்வதாக என் தம்பி வீமன் செய்திருக்கும் சபதம் வீணாகப் போய்விடும். அதற்காகத்தான் இப்போது உன்னை உயிருடன் விடுகிறேன். போ! ஓடிப்போய் விடு. இனி இந்தப் போர்க்களத்தில் என் முகத்தில் விழிக்காதே,’ தருமன் கூறியதைக் கேட்காமல் திரும்பவும் ஆயுதங்களைத் தயார் செய்து கொண்டு படைகளுடன் அவனை எதிர்க்க வந்தான் துரியோதனன். தருமனோ தொலைவிலிருந்தே அம்புகளைக் சரமாரியாகத் தொடுத்துத் துரியோதனனையும், அவன் படைகளையும் புறமுதுகு காட்டி ஓடுமாறு செய்து விட்டான். அந்தச் சமயத்தில் துரியோதனன் மட்டும் ஓடாமல் நின்றிருந்தால் தருமனுடைய அம்புகள் நிச்சயம் அவன் உயிரைப் பறித்திருக்கும்.

தருமனிடம் தோற்றுப் படைகளோடு பதறியடித்துக் கொண்டு ஓடிவரும் துரியோதனனைக் கர்ணன் கண்டான்!