பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/495

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
493
 

கண்ணனின் பேச்சும், சிரிப்பும், தருமனுக்கு நிறைய ஆறுதலை அளித்தன. நன்றிப் பெருக்கால் தருமன் கண்ணனைக் கைகூப்பி வணங்கினான். தழுதழுக்கும் குரலில் அவனைப் பாராட்டினான்.

“மாயாவதாரனே! எங்களையும் எங்கள் நலனையும் காப்பாற்றுவதற்காகவே நீ பிறந்தாய் போலிருக்கிறது. இன்று வரை நீ எங்களுக்குச் செய்திருக்கும் உதவிகளை எவ்வாறு அளவிட்டு எண்ணுவது? கங்கை நதியில் துரியோதனன் நட்டிருந்த கழுக்களிலே பாய்ந்து செத்திருக்கவேண்டிய எங்களை அன்று நீதான் காப்பாற்றினாய். எங்கள் மானத்தைப் பறித்தது போதாமல், அவை நடுவில் திரெளபதியின் மானத்தைப் பறிக்க முற்பட்ட நேரத்தில் சத்திய வடிவான தோன்றாத்துணையாக வந்து காப்பாற் றினாய் துருவாச முனிவன் துரியோதனனால் ஏவப்பட்டுப் பசி வெறியோடு எங்களைச் சோதிக்க வந்தான். அட்சய பாத்திரத்திலிருந்து பருக்கையை உண்டு துருவாசரைப் பசி தணிவித்து எங்களை வாழ்த்திவிட்டுச் செல்லுமாறு செய்தாய். எல்லாரையும் யாவற்றையும் ஏவி வாழும் நீ என் ஏவலை மேற்கொண்டு கெளரவர்களிடம் எனக்காகத் தூது சென்றாய் விதுரன் எங்களுக்கு எதிரியாகாமல் வில்லை முறித்தெறிந்துவிட்டு யாத்திரை போகுமாறு ஏற்பாடு செய்ததும் நீதான் . உனது மாயங்களின் மகிமையை அளவிட நான் யார்? இந்தப் போர் தொடங்கியதிலிருந்து ஒவ்வோர் விநாடியும் நீ எங்களுக்குச் செய்திருக்கும். உதவிகளுக்கு நன்றி செலுத்த நான் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் காணாது” - தருமன் சாஷ்டாங்கமாகக் கண்ணனுடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். கண்ணன் தருமனை அன்போடு எழுப்பி மார்புறத் தழுவிக் கொண்டான்.

“பாண்டவர்களாகிய உங்கள் ஐவரையும் காப்பாற்றி, வாழ்விப்பதற்குத் தானே நான் வாழ்கிறேன். உங்களுடைய சகல சுக துக்கங்களையும் நான் ஒருவனே தாங்குகிறேன்.