பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

அறத்தின் குரல்

குமுறிய அவர்கள் இதயத்தின் இருட்டைத் தன்னோடு ஒப்பு நோக்கிக் காண வந்தது போல இரவும் வந்தது. பகலில் மிகுந்த நேரம் நீரில் விளையாடிக் களைத்துப் போயிருந்ததனால் பாண்டவர்கள் முன்பே உறங்கச் சென்றுவிட்டார்கள். கெளரவர்களிலும் துரியோதனன் முதலிய நான்கு பேர்களைத் தவிர ஏனையோர் உறங்கச் சென்றிருந்தனர். பொறாமையாலும் பழிவாங்கும் எண்ணத்தினாலும் இந்த நால்வருக்கும் மட்டும் உறக்கம் வரவில்லை. “வீமனை எந்தவிதத்திலாவது பழி தீர்த்துக் கொண்டாலொழிய என் மனத்திற்கு அமைதி இல்லை“ - என்றான் துரியோதனன்.

“அது தான் அண்ணா என் எண்ணமும் அந்த முரடனுக்குச் சரியானபடி பாடங்கற்பிக்க வேண்டும்” - என்றான் துச்சாதனன். “இன்றே இப்போதே இந்த இருளிலேயே அந்தப் பழியை நாம் தீர்த்துக் கொள்ளத் தவறக் கூடாது” - என்றான் கர்ணன். அதுவரை சிந்தனையில் ஆழ்ந்திருந்த சகுனி அவர்கள் மூவரையும் அருகில் அழைத்து, “வீமனைப் பழிவாங்குவதற்கு நான் இதுவரை எண்ணி முடிவு செய்த திட்டம் இது” - என்று அதை அவர்களிடம் காதோடு காதாகக் கூறினான். சகுனி கூறிய சூழ்ச்சியைக் கேட்டதும் மற்ற மூவரும் அதற்கு ஒப்புக் கொண்டனர். உடனே அதை நிறைவேற்றி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பது என உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டு புறப்பட்டார்கள் அவர்கள்.

சலனமற்று அமைதி திகழும் இரவு. எங்கும் செறிந்த கருக்கிருட்டு. வீமனின் பள்ளியறை, பகலிலே கங்கை நீரில் ஆடி விளையாடிய அலுப்புத் தீர ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட்டிருந்தான் வீமன். கட்டிலில் படுத்திருந்த அவள் மூச்சுவிடும் ஒலியைத் தவிர வேறு ஒலி அங்கே இல்லை . தன் குகையிலே சுதந்திரமாக உறங்குகிற சிங்கத்தோடு ஒப்பிடும்படியாகத் தோன்றியது அவன் உறங்கும் நிலை. உறங்கும் சிங்கத்தின் குகைக்குள்ளே பதுங்கிப் பதுங்கி நுழையும் குள்ளநரிகளைப் போலத் துரியோதனன் முதலிய