பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/502

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
500
அறத்தின் குரல்
 

அகற்றிவிடும். அவன் பாண்டவர்களுக்கு உறவினனாயினும் இப்போரில் நமக்கு உதவி செய்கிறவன். என் மேல் பேரன்பு கொண்டவன். விற்போரில் வல்லாளன். தன்னிகரில்லாத போர்வன்மை கொண்டவன். என்னுடைய வேண்டுகோளுக்காகவே உனக்குக் கீழ்ப்படிந்து உன்னுடைய தேரோட்டியாக அமைந்துள்ளான். நல்ல சுபாவமுள்ள இவனோடு பகைத்துக் கொண்டு காரியத்தைக் கெடுத்து விடாதே. இருவரும் ஒற்றுமையாகப் போரில் ஈடுபடுங்கள். பகைவர்களை வெற்றி கொள்வதில் உங்கள் சாமர்த்தியத்தைக் காட்டுங்கள்.”

துரியோதனனுடைய சொற்கள் கர்ணன் சல்லியன் இருவர் மனத்திலுமிருந்த குரோதத்தைப் போக்கின. இருவரும் வாட்போரை நிறுத்தினர். பகைமை தற்காலிகமாக மறைந்துவிட்டது. இருவரும் பழையபடி தேரில் ஏறிக் கொண்டனர். அந்தச் சமயத்தில் பாண்டவர் பக்கமிருந்து துட்டத்துய்ம்மன் படைகளோடு போருக்குப் புறப்பட்டு வந்தான். சோமக வம்சத்தைச் சேர்ந்த தலைமை சான்ற பெருவீரர்கள் பலரும் துட்டத்துய்ம்மனோடு சேர்ந்து கொண்டு வந்தனர். அந்தப் பெரிய படை கர்ணனுடைய தேர் நின்று கொண்டிருந்த இடத்தை யடைந்ததும் சோனாமாரியாக மழை பெய்வதுபோல் அம்புகளை எய்தது. சல்லியன் சாமர்த்தியமாகத் தேரை முன் பக்கத்தில் கொண்டு வந்து நிறுத்தினான். கர்ணனும் தன்னுடைய படைகளுடன் துட்டத்துய்ம்மன் கோஷ்டியரை எதிர்த்துப் போர் புரிந்தான். விரைவில் போர் உச்சநிலையை அடைந்தது. வீரர் பலர் இரு தரப்பிலும் அம்புகள் பட்டு ஆற்ற முடியாமல் இறந்தனர். திடீரென்று கர்ணனும் அவனுடைய படைகளும் விரைவாக முன்னேறினர். துட்டத்துய்ம்மனை மிகக் கடுமையாகத் தாக்கினான் கர்ணன். அந்தத் தாக்குதலைப் பொறுத்துக் கொண்டு சமாளிக்க முடியாமல் தன்னுடைய தேரை வந்த வழியே திருப்பிச் செலுத்திக் கொண்டு தோற்று ஓடினான் துட்டத்துய்ம்மன்.