பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

502

அறத்தின் குரல்

கதக்கண்ணன் முன் பக்கத்தில் பாய்ந்து ஓடி வந்தான். தன்னந்தனியாய் ஓடி வந்த அந்த இளைஞனை நகுலன், தன் வில்லிலிருந்து அனுப்பிய அம்புகளால் மிரண்டு போய்த் திரும்பி ஓடச் செய்து விட்டான்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தோற்று ஓடி வந்தவர்களையெல்லாம் ஒன்று திரட்டிக்கொண்டு கர்ணன் தருமனை எதிர்க்க முன் வந்தான். கர்ணன் கோஷ்டியாரும், தருமன் கோஷ்டியாரும் எதிரெதிரே சந்தித்துப் போர் தொடங்கினார்கள். கூற்றுவனுக்கு நல்விருந்தாக இருபுறத்திலும் எண்ணற்ற வீரர்கள் இறந்தனர். கர்ணன் எய்த சில கணைகள் தருமனுடைய உடலில் தைத்தன. கர்ணனுடைய இரண்டு தோள் பட்டைகளிலும் அம்புகள் நிறையப் பாய்ந்து குருதி வடிந்து கொண்டிருந்தது. எங்கே இரண்டு தோள்களும் அறுந்து விழுந்துவிடுமோ என்று அஞ்சத்தக்க அபாயகரமான நிலையில் இருந்தான் கர்ணன். போதாத குறைக்கு அவனுடைய வில்லை வேறு முறித்துக் கீழே தள்ளிவிட்டான் தருமன். இந்தத் தீய அறிகுறிகளெல்லாம் கர்ணனுடைய அந்திம காலம் நெருங்குவதைக் குறித்தன.

3. தீயவன் தீர்ந்தான்

குருதி வெள்ளத்தின் இடையே நின்று கொண்டிருந்த கர்ணனைத் தருமன் விட்டுச் சென்றதும் துட்டத்துய்ம்மனை மீண்டும் பிடித்துக் கொண்டான். சகாதேவன், தண்டதரன் தண்டகன், சித்திரதேவன் என்னும் பெயர்களை உடைய துட்டத்துய்ம்மனின் தம்பிமார்களும் அவனோடு கூடப் போருக்கு வந்திருந்தனர். ஆனாலும் கர்ணனுக்கும் துட்டத்துய்ம்மனுக்கும் நிகழ்ந்த போரில் இம்முறையும் துட்டத்துய்ம்மனே தோல்வியடையும் நிலைக்கு இளைத்துத் தளர்ந்து போனான்.

அந்த இக்கட்டான சமயத்தில் தருமன் தன்னுடைய படைகளோடு துட்டத்துய்ம்மனுக்கு உதவுவதற்காக