பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

503

அவனோடு வந்து சேர்ந்து கொண்டான், தனக்குத் தேரோட்டியாக இருந்த சல்லியனின் உதவியால் கர்ணன் உடலில் பல இடங்களில் காயம்பட்டிருந்தும் பொறுத்துக்கொண்டு ஆவேசத்தோடு போரிட்டான். தருமன் திரும்பவும் கர்ணனுடைய வில்லை ஒடித்தான். தேர்ச் சட்டங்கள் சிதறிப் போகுமாறு ஒடித்துத் தள்ளினான். தேரோட்டியாகிய சல்லியனின் உடம்பு சல்லடைக் கண்களாகுமாறு துளைத்தான், சல்லியனின் உடலில் அம்பு பாய்வதற்கு இனி இடமே இல்லை என்று சொல்லுமாறு அணுவளவு இடங்கூட எஞ்சவிடாமல் அம்புகள் பாய்ந்துவிட்டன. தேரின் முன்புறம் கட்டப்பட்டிருந்த குதிரைகளும் அம்புக்கு இரையாயின. கர்ணனுக்குத் துணையாக வந்திருந்த வடகலிங்கத்து வீரர்களைத் திக்குமுக்காடச் செய்து விட்டான் தருமன்.

எதிரிகள் யாவரையும் தோற்கச் செய்து முடித்தவுடன் தன் வெற்றிச் சங்கத்தை விண்ணதிர மண்ணதிர, எண்திசைகளுமதிர, எடுத்து முழங்கினான். ஈரேழு பதினான்கு புவனங்களிலும் அந்த வெற்றி முழக்கம் கணீரென ஒலித்து அடங்கிற்று. வெற்றி முழக்கத்திற்குப் பின் சிறிது நேரம் அமைதியிற் கழிந்தது. கர்ணன் தன் பாசறைக்குச் சென்று மீண்டும் படையெடுத்து வருவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தான். தருமன் முழங்கிய வெற்றிச் சங்கொலி ஓய்கிற நேரத்துக்கு இன்னொரு சங்கொலி அதனினும் பெரியதாக எதிர்ப்புறமிருந்து கிளம்பிற்று. தருமன் அந்தப் புதிய சங்கொலியைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். கர்ணன் தேரில் நின்று சங்கு முழங்கியவாறே படைகளோடு புறப்பட்டு வந்து கொண்டிருந்தான். தருமனுக்கு அருகில் வந்ததும் வில்லை வளைத்து அம்புகளைத் தொடுத்தான் அவன். திடீரென்று ஏற்பட்ட இந்தத் தாக்குதலைத் தருமன் சமாளிக்க முற்படுவதற்குள் அவனுடைய மார்பிலும் தோளிலும் சில அம்புகள் ஆழமாகப் பாய்ந்து விட்டன. தருமனுடைய