பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/508

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
506
அறத்தின் குரல்
 

தொடுத்தான். அந்த அம்பு அசுவத்தாமனுடைய மார்பில் பாய்ந்து மார்பைப் பிளந்தது. அதே அம்பு வேறொருவனை அந்நிலையில் தாக்கியிருக்குமானால் அவன் துடிதுடித்துக் கீழே விழுந்து இறந்து போயிருப்பான். ஆனால் அசுவத்தாமன் சிரஞ்சீவித்துவ வரம் பெற்றவன். எளிய முறையில் மரணம் அவனை அணுக முடியாது. எனவே அம்பு பாய்ந்ததும் இறந்து விடவில்லை, மெல்லத் தளர்ந்து தேரின் மேல் விழுந்தான். அவனை விழவிடாமல் ஓடிவந்து தாங்கிக் கொண்டான் துச்சாதனன். அசுவத்தாமனுடைய உடல் கெளரவர் பாசறைக்குக் கொண்டு செல்லப்பட்டது. சிறிது நேரத்தில் தெளிவும் வலிமையும் பெற்று இன்னோர் தேரில் ஏறிக்கொண்டு அர்ச்சுனனோடு போரிடுவதற்கு வந்தான் அசுவத்தாமன். அப்போது சித்திரவாகனன் என்னும் பாண்டிய மன்னன் அவனை வழிமறித்துக் கொண்டு போர் செய்ய ஆரம்பித்தான். பாண்டியனுக்கும் அசுவத்தாமனுக்கும் நிகழ்ந்த போரில் பாண்டியன் கை மேலோங்கியது. அவன் அசுவத்தாமனின் வில்லையும் தேரையும் தகர்த்தான். திரும்பிச் சென்ற அசுவத்தாமன் வேறு வில்லோடு வேறு தேரில் ஏறி வந்தான். பேரலைகளை வாரி இறைக்கும் மாபெருங் கடலையே வேல் கொண்டெறிந்து அடக்கிய பாண்டியனுக்கு அசுவத்தாமனையும் அவனோடு இருந்த சிறிய படையையும் அடக்குவது பெரிய செயலா? சித்திரவாகன பாண்டியனை எதிர்க்க முடியாமல் பல முறை புறங்காட்டினான் அசுவத்தாமன். கடைசி முறையாக ஆத்திரத்தோடு வந்த அசுவத்தாமன் பாண்டியனுடைய தேரை ஒடுக்கி நிறுத்திவிட்டான். சற்று நேரத்தில் தேர் ஒடிந்து போகுமாறு செய்யவே பாண்டியன் ஒரு யானை மேல் ஏறிக் கொண்டு போரைத் தொடர்ந்தான். அசுவத்தாமன் அந்த யானையையும் அம்பு எய்து கொன்று விட்டான்.

ஏறிக் கொண்டு போர் செய்வதற்கு வேறு வாகனம் அகப்படாமல் திகைத்த பாண்டியன் தரையில் நின்று கொண்டே அசுவத்தாமனோடு போரிட்டான். பாண்டியன்