பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

507

செலுத்திய பல அம்புகள் அசுவத்தாமன் உடம்பைத் துளைத்துக் குருதி சிந்தச் செய்துவிட்டன. அம்புகள் பாய்ந்த வலியினாலும் பாண்டியன் மேலிருந்த கோபத்தினாலும் தூண்டப்பட்ட அசுவத்தாமன் சக்தி வாய்ந்த கணை ஒன்றை எடுத்துத் தொடுத்தான். அந்தக் கணை பாண்டியனுடைய மார்பில் பாய்ந்து ஊடுருவியது. பாண்டியன் அலறிக் கொண்டே கீழே விழுந்து உயிர் துறந்தான். அவனுடைய படைகள் பயந்து ஓடின, அசுவத்தாமனும் அவனைச் சேர்ந்த கெளரவர் படைகளும் வெற்றி முழக்கம் செய்தனர்.

அசுவத்தாமன் பாண்டியனைக் கொன்றுவிட்டான் என்ற செய்தியைத் தென்னாட்டின் மற்றோர் பேரரசனாகிய சோழ மன்னன் கேள்விப்பட்டான். ‘பாண்டியனைக் கொன்றவனைப் பழிவாங்காமல் விடமாட்டேன்’ என்று சோழன் போர்க்கோலம் பூண்டுவந்தான். சோழனும் பாண்டவர் பக்கமே தன் படைகளோடு சேர்ந்திருந்தான். பாண்டவர்களுடைய பாசறை ஒன்றில் அவன் ஓய்வு கொண்டு உட்கார்ந்திருந்த போதுதான் சித்திரவாகன பாண்டியனுடைய மரணச் செய்தி அவனுக்கு எட்டியது. உடனே படைகளோடு போர்க்கோலம் பூண்டு அசுவத்தாமனை எதிர்ப்பதற்குக் கிளம்பி விட்டான் அவன்.

“ஏ! அசுவத்தாமா! தரையில் நின்று கொண்டு போர் புரிந்த சித்திரவாகன பாண்டியனை நீதேர்மேலிருந்து அம்பு செலுத்திக்கொன்றது நீதியாகுமா? நீ ஓர் ஆண் மகனாக இருந்தால் இப்படிச் செய்ததற்கு வெட்கப் படவேண்டும். உன் தந்தையைக் கொன்றானே துட்டத்துய்ம்மன், அவனைப் பழிவாங்குவதற்குத் திறமை இல்லை உனக்கு. நீயும் ஒரு வீரனென்று பெருமைப் பட்டுக்கொள்கிறாயே? என்று இகழ்ந்து கூறிக்கொண்டே சோழன் அசுவத்தாமனோடு போரிட்டான். சோழன் எறிந்த வேல் பாய்ந்து அசுவத்தாமன் பிரக்ஞையிழந்து வீழ்ந்தான். அவனை அங்கிருந்து தூக்கிக்கொண்டு போய்த் துரியோதனனுடைய தம்பியர்களும் சகுனியும் பிரக்ஞை வரவழைப்பதற்கு முயன்றனர்.