பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

49


நால்வரும் கையில் கயிற்றுச் சுருள்களுடன் வீமனின் பள்ளியறைக்குள் நுழைந்தனர். வீமனோ தன்னை மறந்து உறக்கத்தில் ஆழமாக இலயித்துப் போயிருந்தான். வந்த நால்வரும் தாங்கள் கொண்டு வந்திருந்த கயிறுகளால் கட்டி லோடு கட்டிலாக வீமனை இறுக்கிக் பிணித்தனர். அவன் அப்போதும் உறக்கம் நீங்கி விழித்துக் கொள்ளவில்லை. கட்டிலோடு அவனைத் தூக்கிக் கொண்டு கங்கையை நோக்கி நடந்தனர். அவர்களுடைய இந்த வஞ்சகச் செயலுக்குத் துணை செய்வது போல இரவின் தனிமையும் அமைதியும் வேறு பொருந்தியிருந்தன. தடுப்பதற்கு எவருமில்லை. சதி செய்யும் நினைவோடு விரைந்தனர்.

வீமன் கட்டிலோடு, பொங்கி நுரைத்துப் பாயும் கங்கை வெள்ளத்தில் வீழ்த்தப்பட்டான். அமுதம் கடையக் கடல் புகுந்த மந்தர மலையோ என்றெண்ணும்படி இருந்தது, வீமனை அவர்கள் கங்கையில் இட்ட காரியம். வீமனை இவ்வாறு வீழ்த்திவிட்டுப் போகும் போதே துரியோதனன் முதலியோர்க்கு வேறு ஒரு சந்தேகமும் உடனெழுந்தது. ஒரு வேளை வீமன் பிழைத்தெழுந்து வந்துவிட்டால் என்ன செய்வது?’ - என்று அஞ்சினர். அவன் பிழைத்துக் கரையேறி வந்தாலும் அவனை அடித்துப் புடைத்துக் கொன்றுவிட வேண்டுமென்று நான்கு கொழுத்த வீரர்களையும் கங்கைக் கரையில் இருளில் ஒளிந்திருக்குமாறு செய்து விட்டு அதன் பின்பே அரண்மனைக்குத் திரும்பினர். அவர்கள் நினைத்தபடியே வீமன் கரையேறிப் பிழைத்து வந்தது மெய்தான்! தண்ணீரின் குளிர்ச்சி அவனுடைய உறக்கத்தைக் சுலைத்தது. உடல் கட்டிலுடனே பிணிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து மூச்சை அடக்கி அழுத்தமாக வெளியிட்டான் வீமன், கட்டப்பட்டிருந்த கயிறுகள் அறுந்து சிதறின. வீமன் நீந்திக் கரையேறினான். கரையில் துரியோதனன் முதலியோரால் ஏவப்பட்டிருந்த தடியர்கள் நாலு பேரும் வீமன் மேல் பாய்ந்தனர். வீமனை அவர்கள் புடைத்துக் கொல்ல வேண்டுமென்பது துரியோதனனுடைய ஏற்பாடு. ஆனால் நிகழ்ந்தது என்னவோ நேர்மாறான நிகழ்ச்சி. வீமன்தான் அவர்களை அடித்துப் புடைத்து வீழ்த்திவிட்டு

அ.கு. - 4