பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

508

அறத்தின் குரல்

சோழன் அன்று செய்த போரில் வேறு பல முக்கியமான எதிரிகள் இறந்தனர். துன்மருஷ்ணனின் அன்புக்குரிய மகன் சுவாகு, துன்முகனின் புதல்வனான சுவாது கர்ணன் குலக்கொழுந்தாகிய சங்கன் ஆகிய அரசிளங்குமாரர்கள் சோழனால் போரில் மாண்டு போயினர்.

இங்கு நிலைமை இவ்வாறிருக்க, போர்க்களத்தின் வேறோர் பகுதியில் வீமனும், துச்சாதனன் கோஷ்டியாரும் கடுமையான போரில் ஈடுபட்டிருந்தனர். துச்சாதனனுடன் அவனுடைய இளைய சகோதரர்கள் ஒன்பது பேர் உடனிருந்தனர். துச்சாதனன் தன் பலத்தையும் வலிமையையும் பெரிதாக நினைத்துக் கொண்டுவீமனை நோக்கி, “பாண்டவ வம்சத்தையே இன்று பூண்டோடு அழித்து விடுகிறேன். இது என்னுடைய சபதம்” - என்று கூறினான்.

அதைக்கேட்ட வீமன் இகழ்ச்சி தொனிக்கும் குரலில் பெரிய இடிச்சிரிப்புச் சிரித்தான். சிரித்துவிட்டுத் துச்சாதனனை நோக்கிக் கூறலானான் :- “அடே! துச்சாதனா! நீயும் ஓர் ஆண்மகன் மாதிரி எண்ணிக்கொண்டு பேச வந்து விட்டாயே. உன் ஆண்மையைப் பற்றி ஊரெல்லாம் சிரிப்பாய்ச் சிரிக்கிறது. இன்று உனக்குக் கேடுகாலம். இனிமேல் அதிக நாழிகை நீ உயிரோடிருக்கப் போவதில்லை. உன்னைக் கொன்று என் சபதத்தை இன்று நான் முடித்துக் கொள்ளப் போகிறேன். திரெளபதியும், தன் கூந்தலை முடிந்து கொள்ளப் போகிறாள். உன் தொடையைப் பிளந்து ஒழுகும் குருதியில் என் கைகள் இன்று படியப் போகின்றன. இன்று உன்னை எமனுலகுக்கு அனுப்பப் போகிறேன். நாளை உன் தமையனாகிய துரியோதனனை எமனுலகுக்கு அனுப்பப் போகிறேன் எடு வில்லை” - என்று வீமன் இடிமுழக்கம் போன்ற குரலில் பேசி முடித்தான். துச்சாதனனும் அவனைச் சேர்ந்தவர்களும் வில்லை வளைத்து வீமனுடன் போரிடத் தொடங்கினார்கள். வீமனும் அம்புகளைப் பொழிந்தான். துச்சாதனனின் சகோதரர்கள் ஒன்பது பேர் வரிசையாக அடுத்தடுத்து இறந்த வேதனை அவன் மனத்தை வாட்டியது.