பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

509

வீமனிடம் அவனுக்குப் பயம் ஏற்பட்டுவிட்டது. ஆனாலும் பயத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல் போர் செய்தான். போரின் கடுமையால் இருவருடைய தேர்களும் அச்சு முறிந்து நொறுங்கிப் போயின. விற்போரை நிறுத்தி விட்டு, இருவரும் தரையில் குதித்தனர். கதாயுதங்களை எடுத்துக் கொண்டு மீண்டும் போரைத் தொடங்கினர்.

கதையோடு கதை மோதும் ஒலி விண்ணதிர எழுந்தன. மோதிய கதைகளில் சூடு பிறந்து கனற்பொறிகள் சிதறின. இருவரும் பாய்ந்து பாய்ந்து தாக்கினார்கள். அவர்களுடைய கண்கள் தழலெனச் சிவந்தன. உடலெங்கும் வியர்வை பெருகி வெள்ளமாக வழிந்தோடியது. அடியும் மோதலுமாக எவ்வளவு நேரந்தான் அந்தக் கதாயுதங்கள் தாங்கும் இருவர் ஆயுதங்களும் உடைந்து போயின. உடைந்த ஆயுதங்களைக் கிழே எறிந்துவிட்டு மற்போர் செய்ய ஆரம்பித்தார்கள் இருவரும். மூக்கு முகம் பாராமல் ஒருவரை ஒருவர் கடுமையாகக் குத்தித் தாக்கிக்கொண்டார்கள். ‘விண்’ ‘விண்’ - என்று குத்துக்கள் விழுந்தன.

வீமன் துச்சாதனனைக் கீழே தள்ளி அவன் மார்பின் மேல் ஏறி உட்கார்ந்தான். துச்சாதனன் திமிறினான்; முடியவில்லை. வீமனுடைய முரட்டுக் கைகள் துச்சாதனன் மார்பைக் குத்திக் கீறின. இரணியனைத் திருமால் நரசிம்மாவதாரத்தில் குடலைப் பிளந்தது போல் துச்சாதனனின் மார்பைப் பிளந்து அதிலிருந்து ஒழுகும் குருதியில் கைகளைக் கழுவிக் கொண்டிருந்தான் வீமன்.

அதன்பின் துச்சாதனன் எழுந்திருக்கவேயில்லை. இரத்த வெள்ளத்தினிடையே துடிதுடித்துக் கொண்டு கிடந்தது தீமையே உருவமாகிய அவனுடைய உடல், வீமனுடைய சபதமும், துச்சாதனனுடைய வாழ்வும் திரெளபதியினுடைய கூந்தலும், அன்று ஒரே சமயத்தில் முடிக்கப்பட்டன. தீமையின் உருவமொன்று அழிந்து விட்டது.