பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4. சங்கநாதம்

துச்சாதனனுக்கு இந்தக் கதி நேரிட்டதும் இதைக் கண்டு நடுங்கிப் போன அவனுடைய படைகள் போர்க் களத்திலிருந்து ஓட்டம் பிடித்தன. கெளரவர்களின் சேனாபதியாகிய கர்ணனால் கூட அந்தப் படைகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. வீமனுக்கு முன்னால் நிற்பதற்கே அஞ்சித் தறிகெட்டு ஓடியது படை துச்சாதனன் மார்பைப் பிளந்து வீமன் கொன்ற காட்சி யாவர் மனத்திலும் பயங்கரமும் கோரமும் நிறைந்த ஒரு குரூர நினைவாகப் பதிந்து போயிருந்தது.

துச்சாதனன் வீமனால் கொல்லப்பட்ட செய்திகண்ணன் தருமன் முதலியவர்களுக்கு எட்டியது. உடனே அவர்கள் வீமன் நின்று கொண்டிருந்த இடத்தை அடைந்தனர். வீமன் வெறியினால் துச்சாதனனுடைய உடலை இன்னும் என்னென்னவோ செய்து கொண்டிருந்தான்.

“திரெளபதியின் தலையை இழுத்த கைகள் இவையல்லவா? அவள் புடவையை இழுத்து அவமானப்படுத்த முயன்ற கைகளும் இவையல்லவா?” என்று சொல்லிக் கொண்டே அந்தக் கைகளை மிதித்துச் சிதைக்கத் தொடங்கினான். அளவு கடந்த வெறியால் துச்சாதனனுடைய இரத்தத்தை அள்ளிப் பருகுகிற அளவுக்குக்கூட வீமன் துணிந்து விட்டான். இரு கைகளாலும் பருகுவதற்காக அவன் இரத்தத்தை வாரி அள்ளியபோது நல்லவேளையாகக் கண்ணன் அந்த இடத்திற்கு வந்து அவனைத் தடுத்தான்.

“அந்தப் பாவியின் விஷ ரத்தத்தைப் பருகாதே, உடனே நிறுத்து” என்று கண்ணன் சப்தமிட்ட பின்பு தான் வீமனை அந்தச் செயலிலிருந்து நீக்குவதற்கு முடிந்தது. ‘சபதத்தை முடித்து விட்டேன். இனிமேல் கவலை இல்லை’ - என்று கூறிக் கொண்டே தருமனை வீமன் வணங்கினான்.