பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

511

கண்ணனையும் வணங்கினான். இருவரும் அவனை வாழ்த்தினர். துச்சாதனனுட்படத் துரியோதனனுடைய தம்பியர்களில் மொத்தம் பத்துப்பேரை வீமன் கொன்று விட்டதை அறிந்த போது தருமனுக்கும் கண்ணனுக்கும் மகிழ்ச்சி உண்டாயிற்று. ஆனால் துரியோதனாதியர்களின் தளபதியான ‘கர்ணன்’ என்ன செய்வதென்றே புரியாமல் திக்பிரமை பிடித்துப் போய் உட்கார்ந்து விட்டான். சொல்லி மாளாத கவலை அவனுக்கு ஏற்பட்டிருந்தது. வெந்த புண்ணில் வேல் நுழைப்பதைப்போல் இந்தச் சமயம் பார்த்துச் சல்லியன் வேறு அவனைக் குத்திக்காட்டினான், “என்ன கர்ணா! பாண்டவர்கள் வெற்றி முழக்கம் செய்கிறார்கள்! நீ பேயடித்தவன் போல் பேசாமல் திகைத்து உட்கார்ந்து விட்டாய். உனக்கு ஏதாவது அச்சம் வந்து விட்டதோ?” என்று சல்லியன் கூறிய சொற்கள் கர்ணனின் மனத்தில் சுருக்கென்று தைத்தன.

“துச்சாதனன் இறந்து விட்டானே என்று வருந்தியிருந்தேன். வேறு ஒன்றும் இல்லை” - என்று கர்ணன் சல்லியனுக்கு மறுமொழி கூறிவிட்டு மறுபடியும் போருக்குத் தயாரானான். சிதறி ஓடிய கெளரவப் படைகள் சிறிது சிறிதாக மீண்டும் ஒன்று சேர்ந்தன. வில் ஒலியும், வாள் ஒலியும் தேர்கள் ஓடும் ஒலியும் போர்களமெங்கும் மீண்டும் ஆரவாரம் கிளம்பியது. அமைதி, அனுதாபம், மரண பயம் திகைப்பு எல்லாம் சில விநாடிகள்தான். போர்க்களத்தில் எந்த உணர்ச்சிகளுமே சில விநாடிகளுக்கு மேல் நிலைக்க முடிவதில்லை. கர்ணனின் புதல்வனான, விட சேனனுக்கும் நகுலனுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. விடசேனன் நல்ல பலசாலி. நகுலனைத் தாக்கினான் நகுலன் மூர்ச்சை அடைந்ததைக் கண்ட அர்ச்சுனன்: “இந்த விடசேனன் முரடன்: இவனை அழித்தாலொழிய நம் பக்கத்துப் படைகளுக்கு அதிகம் அழிவு நேரிடும்” என்று எண்ணிக் கொண்டு விட சேனன் மேல் அம்புகளைச் செலுத்தி எதிர்த்தான். அர்ச்சுனன் விட்ட அம்பு ஒன்று விடசேன