பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

516

அறத்தின் குரல்

மேல் தான் கொல்ல வேண்டும்.” என்று தருமனுக்கு மறுமொழி கூறினான் அர்ச்சுனன். அந்த மறு மொழியைக் கேட்டவுடன் அர்ச்சுனனைக் கோபம் பொங்கப் பார்த்தான் தருமன். “உன்னுடைய கையில் ஆயுதமும் மெய்யில் வீரமும் இருந்து என்ன பயன்? இன்னும் கர்ணனைக் கொல்லாமல் வீரனைப் போல் என் முன் வந்து நிற்கிறாயே?” என்றான் தருமன். தருமன் தன்னுடைய வில்லையும் ஆண்மையையும், கேவலமாகப் பேசியதைப் பொறுக்க முடியாமல் அர்ச்சுனனுக்கு அடக்க முடியாத ஆத்திரம் ஏற்பட்டது.

“என் வில்லும் ஆண்மையும் எவரால் பழிக்கப் பட்டாலும் அவர் யாரென்றும் பாராமல் உடனே கொல்வது தான் என்னுடைய வழக்கம்” என்று கூறிக் கொண்டே வில்லை ஓங்கி அடிப்பதற்காகத் தருமன் மேல் பாய்ந்து விட்டான் அர்ச்சுனன். தம்பியின் எதிர்பாராத ஆத்திரத்தால் மருண்ட தருமன் ஒன்றும் செய்யத் தோன்றாமல் நின்றான். அப்போது கண்ணன் அர்ச்சுனனைத் தடுத்து நிறுத்தினான். “உனக்கு ஏன் இன்று இவ்வளவு ஆத்திரம் வருகிறது அர்ச்சுனா? மூத்தவர்களை எதிர்த்துப் பேசுவதே பாவம் நீயோ தருமனைக் கொல்வதற்கே கிளம்பிவிட்டாய், உன் மனமார நீ செய்த சபதம் நிறைவேற வேண்டுமானால் தருமனைக் கொல்ல வேண்டாம். சில இழிந்த சொற்களைச் சொல்லித் திட்டினாலே போதும்” என்று கண்ணன் கூறினான். அவனுடைய சொற்படியே சில கேவலமான வார்த்தைகளைச் சொல்லி அர்ச்சுனன் தருமனைத் திட்டினான். ‘சபதத்துக்காக ஏதோ திட்ட வேண்டும்!’ என்று திட்டிய அந்த வார்த்தைகளைத் தருமன் உண்மையென்று நினைத்துக் கொண்டான். “அர்ச்சுனனே என்னை இப்படியெல்லாம் திட்டுகிறான். இனி நான் எதற்காக இங்கே இருக்க வேண்டும்? சந்நியாசியாக மாறிக் காட்டுக்குப் புறப்படவேண்டியதுதான்” என்று கூறிக் கொண்டே போர்க்கோலத்தைக் களைந்து விட்டுக் காட்டுக்குக் கிளம்பத் தொடங்கிவிட்டான் தருமன்.