பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/519

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
517
 


“இதேதடா வம்பு? சபதம் வீண் போகக் கூடாதே என்பதற்காக இவனைச் சில சொற்களால் வைவது போலக் கூறினால் இவன் உண்மையென்று நினைத்துவிட்டானே?” என்று பயந்து கண்ணனும் அர்ச்சுனனும் தருமனை வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவனைச் சமாதானப் படுத்தினர்.

5. கர்ணன் மரணம்

விரைவிலேயே தருமன் சமாதானமடைந்தான். ‘உடனே கர்ணனைக் கொன்று தீர்ப்பதாக’ வாக்குறுதியைக் கொடுத்தான் அர்ச்சுனன், அந்த வாக்குறுதியை அவனிடமிருந்து பெற்றுக் கொண்டபின் தருமன் அவனை மன்னித்தான். தான் காடு போவதையும் தருமன் நிறுத்திக் கொண்டான்.

இதன்பின் அர்ச்சுனன் மீண்டும் தேரில் ஏறி கர்ணனோடு போருக்குப் புறப்பட்டான். அர்ச்சுனன், கர்ணன் இருந்த இடத்தை அடையும் போது ஏற்கெனவே அங்கே வீமனுக்கும் கர்ணனுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. போன வேகத்தில் நெருப்புக் கணையை எடுத்து கர்ணன் மேல் செலுத்தினான் அர்ச்சுனன். கர்ணன் உடனே வருணா ஸ்திரத்தை ஏவி நெருப்புக்கணையை அழித்து விட்டான். பின்பு இருவரும் மாறி மாறிப் பல கணைகளைத் தொடர்ந்து ஒருவர் மேல் ஒருவர் எய்து கொண்டனர். ஒன்றை ஒன்று விழுங்கியும், ஒன்றைவிட ஒன்று எஞ்சியும், இருவர் அம்புகளும் போர்க் களத்தைச் செங்குருதி வெள்ளமாக மாற்றிக் கொண்டிருந்தன. கடைசியாக அர்ச்சுனன் பிரம்மாஸ்திரத்தைச் செலுத்தினான். ருத்திராஸ்திரத்தினால் அதைச் சுட்டுப் பொசுக்கி விட்டான் கர்ணன்.

இதன் பின் ‘ஒருவரை ஒருவர் எப்படித் தாக்குவது? என்ற யோசனையில் இருவருமே சிறிது நேரம் சும்மா இருந்து விட்டனர். கர்ணனுடைய உள்ளத்தில் குரோதம் புகைந்தது.