பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

522

அறத்தின் குரல்


ஒரு கணம் கர்ணன் அந்த வேதியரைக் கண் இமைக்காமல் உற்றுப் பார்த்தான், ஒரே ஒரு கணம்தான். மறுகணம் அவனுக்கே உரிய பெருந்தன்மை காரணமாக அந்த முகம் மலர்ந்தது. அதில் ஒரு வள்ளலுக்கே உரிய தாராள குணத்தின் சாயல் நிழலிட்டது.

“வேதியரே! உயிர் உடலின் உள்ளே இருக்கிறதா? வெளியே போய்விட்டதா? என்று நானே அனுமானித்து உணர முடியாத அந்திம காலத்தில் நீர் என்னைத் தேடி வந்திருக்கிறீர். யார் எதைக் கேட்டாலும் நான் தயங்காமல் வாரி வழங்கிக் கொண்டிருந்த காலத்தில் வராமல் போர்க்களத்தில் உயிருடனும் உடம்புடனும் போராடிக் கொண்டிருக்கும் வேதனை நிறைந்த சந்தர்ப்பத்தில் வந்திருக்கிறீர் பரவாயில்லை. இப்போது இந்த ஒன்றுமில்லாத நிலையிலும் உமக்கு வேண்டியதாகவும் என்னால் கொடுக்க முடிந்ததாகவும் ஒரு பொருள் என்னிடம் இருக்கிறது. அதை உமக்குக் கொடுப்பதில் நான் பெருமைப்படுகிறேன். இதோ என்னுடைய புண்ணியம் முழுவதையும் பெற்றுக் கொள்ளும்” என்று கூறிக்கொண்டே கர்ணன் தன் புண்ணியம் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு அந்த வேதியரின் கால்களில் விழுந்து வணங்கினான்.

“கர்ணா! மிகவும் நன்றி. கையில் தண்ணீரைத் தாரை வார்த்து முறைப்படி உன் புண்ணியத்தை எனக்குத் தானம் செய்து கொடு” என்றான் வேதியன்.

ஆனால் அந்த நேரத்தில் பயங்கரமான போர்க்களத்தின் இடையே தண்ணீர் ஏது, தாரை வார்த்துக் கொடுக்க? தன் மார்பிலிருந்து வழிந்து கொண்டிருந்த இரத்தத்தை ஏந்தி அதையே வேதியனின் கையில் தண்ணீராக வார்த்து, தான் செய்த புண்ணியம் முழுவதையும் கர்ணன் அவருக்குத் தத்தம் செய்து கொடுத்தான். வேதியன் சந்தோஷத்துடன் அதை வாங்கிக் கொண்டான்.