பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/527

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
525
 

சாவை நெருங்கிக் கொண்டிருந்த அவன் உடலைத் தன் மடியில் எடுத்து வைத்துக்கொண்டு பலவாறு புலம்பினாள். பெற்ற பாசத்தினால் அவளுடைய மார்பகங்களில் பால் சுரந்தது, பிறந்த அன்று கிடைக்காத தாய்ப்பால் அப்போது போர்க்களத்தின் பயங்கரமான சூழ்நிலையில், மரணத் தறுவாயில் கர்ணனுக்குக் கிடைத்தது. பெற்றும் வளர்க்கப் பயந்து ஆற்றிலே விட்டவளின் இதயத்திலிருந்து அத்தனை காலத்துக்குப் பிறகு சுரந்த அந்தச் சில துளிபாலை உட்கொண்ட பின் கர்ணனுடைய உடலிலிருந்து உயிர் அமைதியாகப் பிரிந்து சென்றது.

‘குந்தி கர்ணனின் உடலை எடுத்து வைத்துக்கொண்டு ஏன் அழுகிறாள்? அவளுக்கும் கர்ணனுக்கும் என்ன சம்பந்தம்? கர்ணனுடைய மரணத்தைச் சகிக்காமல் அவள் அலறியழுவதேன்?’ என்று பாண்டவர்கள் உட்படப் போர்க்களத்தில் கூடியிருந்த அத்தனை பேருக்கும் எதுவுமே தெளிவாக விளங்கவில்லை. அங்கே அந்த மாபெரும் இரகசியம் இரண்டே பேருக்கு மட்டும் தான் தெரியும். அவர்கள் கண்ணன், குந்தி ஆகிய இருவரே.

இப்படி இவர்கள் வியப்பில் மூழ்கி வருந்திக் கொண்டிருந்த போது துரியோதனன் ஒருபுறம் கர்ணன் பிரிவு தாங்க முடியாமல் கதறி அழத் தொடங்கினான். அவனுக்கிருந்த கடைசி நம்பிக்கையாகிய கர்ணனும் அழிந்து போய்விட்டான். அவனால் பொறுத்துக் கொள்ள முடியாத அழிவு அது.

“வீராதி வீரனே! நீ இறந்து விட்டாய். இனிமேல் என் படைகளைத் தலைமை தாங்கி நடத்துவதற்கு யார் இருக்கிறார்கள்? ஒப்பற்ற நண்பா! உன்னை இழந்த இனி நான் எப்படி வாழப் போகிறேன். இனி நான் போரில் வென்று ஆகப்போவது தான் என்ன? இனி இந்த உலகத்தை நான் ஆளவும் வேண்டுமா? நீ போன பின் எனக்கு வேண்டியது எது? வேண்டாதது எது?” துரியோதனன் கல் நெஞ்சுக்காரன்.