பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/528

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
526
அறத்தின் குரல்
 

அவனே விக்கி விக்கி அழுததைப் பார்த்தபோது போர்க் களத்திலிருந்தவர்களுக்குப் பரிதாபமாக இருந்தது.

“தங்களுடைய தாய் கர்ணனுக்காக ஏன் இவ்வளவு அலறியழுகிறாள்?” என்று திகைத்து மயங்கிய பாண்டவர்கள் கண்ணனிடம் போய்க் கேட்டார்கள்.

உடனே கண்ணன். “கர்ணன் உங்களுடைய தமையன். அவன்தான் தர்மனுக்கும் மூத்தவன்” என்று கூறிக் கர்ணனுக்கும் குந்திக்கும் உள்ள தொடர்பைப் பற்றி விவரித்தான். அவற்றைக் கேள்விப்பட்டவுடன் பாண்டவர்களும் அலறியழுது கொண்டே கர்ணனின் சடலத்தை நோக்கி ஓடினார்கள். கர்ணன் தங்களுடைய மூத்த சகோதரன் என்று அறிந்ததும் அவர்கள் நெஞ்சு பதறியது; உடல் நடுங்கியது.

“அம்மா! நீ ஏன் இந்த இரகசியத்தை முன்பே எங்களுக்குச் சொல்லவில்லை? ஐயோ! நாங்களே கர்ணனின் உயிருக்கு உலை வைத்து விட்டோமே” என்று குந்தியை நோக்கிப் பாண்டவர்கள் ஐந்து பேரும் கதறினர்.

“ஏ! கண்ணா நீ பொல்லாத சூழ்ச்சிக்காரன். உனக்கு இந்த இரகசியம் தெரிந்திருந்தும் நீ சொல்லாமல் இருந்து விட்டாயே? தாயும் நீயுமாகச் சேர்ந்து கொண்டு எங்களைப் பெரிதும் ஏமாற்றி விட்டீர்கள் வஞ்சகம் செய்து விட்டீர்கள். உன் சூழ்ச்சிகள் மனிதர்களுக்குப் புரியவே மாட்டேனென்கிறதே! இரணியனை அவன் பெற்ற பிள்ளை பிரகலாதனைக் கொண்டே கொல்லித்தாய். அரக்கனான இராவணனை அவனுடைய தம்பியாகிய விபீஷணனைக்கொண்டே அழித்துவிட்டாய். எங்கள் முன் பிறந்தவனாகிய மூத்த தமையனை எங்களைக் கொண்டே கொன்றுவிட்டாய். நீ மாயவதாரன். கபட நாடக சூத்திரதாரி. உன் மாயைகளை மனிதர்கள் புரிந்து கொள்ள முடிவதில்லையே?” என்று கண்ணனைக் குறை சொல்லி முறையிட்டார்கள். அவன் பாண்டவர்களுக்குப் பதில் சொல்லவில்லை. மறுமொழி கூறாமல் தலையைக் குனிந்து கொண்டான். அப்போது