பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/529

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
527
 

அவனுடைய முகத்தில் சிரிப்பா, அழுகையா, சோகமா, மகிழ்ச்சியா, எது என்றே இனங்கண்டு கொள்ள முடியாததோர் மெல்லிய சலனம் புலப்பட்டது. யாருக்குத் தான் புரியும் அவனுடைய அலகிலா விளையாடல்கள்?

கர்ணனுடைய மரணம் போர்க்களம் முழுவதும் ஒருவிதமான சோகம் ததும்பி நிற்கும் துயர அமைதியை உண்டாக்கிவிட்டிருந்தது. அவனுடைய மரணமாகிய வேதனையால் பாண்டவர்கள், கௌரவர்கள் ஆகிய இரு சாரருமே துயரங் கொண்டனர். அந்திமக் கிரியைகளுக்கான ஏற்பாடுகள் நடை பெறலாயின. போட்டியும், பொறாமையும், பகைமையும், குரோதமும் நிறைந்து நின்ற அந்தப் போர்க்களம் கர்ணனுடைய மரணத்தால் யாவற்றையும் மறந்து சோகம் என்ற ஒரே ஓர் உணர்வில் ஆழ்ந்து அமிழ்ந்து போயிருந்தது.

அன்றிரவு துரியோதனனுக்குத் தூக்கமே இல்லை. உணவு, உறக்கம், மறுநாள் போர், எதைப் பற்றியுமே கவலைப்படாது கர்ணனைப் பிரிந்த துன்பத்தில் மூழ்கியிருந்தான் அவன்.

சகுனி அப்போது அங்கே வந்தான். “துரியோதனா! இறந்தவன், நாம் வருத்தப்படுகிறோம் என்பதற்காக இனி மேல் திரும்பியா வரப்போகிறான்? கவலையைக் கைவிட்டு விடு. நாளைப் போருக்கு யாரைத் தரைவனாக நியமிக்கலாம். அதைப்பற்றி இப்போதே தீர்மானித்துக் கொள்ள வேண்டாமா?” என்று சகுனி துரியோதனனைக் கேட்டான்.

பின்பு ‘படைத் தலைவனாக யாரை நியமிப்பது’ என்பது பற்றி அன்று இரவு சகுனியும் துரியோதனனும் நீண்ட நேரம் விவாதித்தனர். இறுதியில் இருவரும் ஏகமனதாக ஒரே முடிவுடன் ஒரே ஆளைத் தேர்ந்தெடுத்தார்கள். பதினெட்டாவது நாள் போருக்குச் சல்லியனைப் படைத் தலைவனாக்குவது என்பதே அவர்களுடைய அந்தத் தீர்மானம். கர்ணனுக்குப் பின்னர் கெளரவ சேனையில்