பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

51


கரையேறினான். தீய உள்ளம் படைத்த துரியோதனாதியர் இம்முறையும் ஏமாற்றமே அடைந்தனர்.

வஞ்சகர்களைப் பொருத்தமட்டில் ஏமாற்றம் என்பது குரூரத்தை மேலும் மேலும் வளர்க்கின்ற சாதனமாகப் பயன்படுகிறது. அடுத்த முயற்சியாக, வீமனை விருந்துக்கு அழைத்து நஞ்சு கலக்கப் பெற்ற உணவு வகைகளைப் பரிமாறிக் கொன்று விடுவதென்று தீர்மானித்தனர். இம்முறை வீமனின் உயிர் எப்படியும் தங்களுடைய வஞ்சகத்திற்குத் தப்ப முடியாதென்பது அவர்களது திடமான எண்ணம். ஆனால் வாழ்க்கையின் முதல் முடிவு என்பது மனித சித்தத்திற்கு மீறிய செயல் என்பதை அவர்கள் சற்றே சிந்தித்து உணர முற்பட்டிருந்தால் இவ்வளவு திடமாக எண்ணியிருக்க மாட்டார்கள்! துரியோதனாதியர் ஏற்படுத்திய விருந்துக்கு வீமன் வந்தான். உணவுகளில் நஞ்சு கலக்கப் பெற்றிருப்பதை அறியாமலே உண்டான். எதிர்பார்த்தபடி உணவு உண்டு. முடிந்த சிறிது நேரத்திலேயே மயங்கி வீழ்ந்தான். துரியோதனாதியர் தங்கள் ஏவலாட்களைக் கொண்டு மயங்கி விழுந்த வீமனின் உடலைக் கயிறுகளால் பிணித்து மீண்டும் கங்கையில் கொண்டு போய்த் தள்ளினர். பீமனுடைய உடல் கங்கையில் அமிழ்ந்து ஆழத்திற்குச் சென்றது. கங்கையில் வசித்து வந்த பாம்புகள் அவனுடைய உடலைக் கடித்தன. ஏற்கனவே நஞ்சு கலந்த உணவை உண்டிருந்ததனால் பாம்புகளின் நஞ்சு அவனை ஒன்றும் துன்புறுத்த வில்லை. அதனுடன் மட்டுமின்றி வீமனுடலில் முன்பே ஏறியிருந்த நஞ்சையும் முறிவு செய்து போக்கி விட்டன இந்தப் பாம்புகள்.

பின்பு ‘வாசுகி’ என்னும் பெயர் பெற்ற பாம்புகளின் தலைவனுக்கு வீமன் அறிமுகமானான். வீமன் வாயு புத்திரன் என்பதை அறிந்து கொண்ட வாசுகி அவனைப் பெரிதும் பாராட்டிப் போற்றினான். வாசுகியின் உதவியால் வீமனுக்கு அமுதம் கிடைத்தது. அமுதம் அருந்திய சிறப்பால் வீமன் நஞ்சுண்ட வேதனையும் சோர்வும் நீங்கிப் புதிய அழகும் உடல் நலமும் பெற்றான். மேலும் சில நாட்கள் வாசுகியுடன் அங்கே