பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

531

போரிட வேண்டும் இந்த முறை மாறாமல் நீங்கள் கௌரவ சேனையை எதிர்த்துப் போர் புரிந்தீர்களானால் நிச்சயம் உங்களுக்குத்தான் வெற்றி, சந்தேகமில்லை” - என்று கூறி தருமனையும், வீமனையும், சல்லியனை எதிர்ப்பதற்கு அனுப்பிவிட்டு, தான் அர்ச்சுனனுடைய தேரில் ஏறிக் கொண்டான் கண்ணன்

அர்ச்சுனனின் தேரைக் கண்ணன் அசுவத்தாமன் இருந்த திசையை நோக்கிச் செலுத்தினான். வீமனும் தருமனும், சல்லியன் இருந்த பக்கமாகத் தத்தம் தேர்களைச் செலுத்திக் கொண்டு சென்றனர். சகாதேவன் சகுனியை நோக்கியும், நகுவன் கர்ணனின் புதல்வர்களை நோக்கியும் சென்றனர். ஊழிக் காலத்து ஓலிகளைப் போன்ற பெரிய சப்தங்களுடன் பதினெட்டாம் நாள் போர் தொடங்கியது. அம்புடனே அம்புகளும், வாளுடன் வாளும், கதையுடன் கதையும் மோதி ஒலி வெள்ளம் ஆரவாரித்துப் பொங்கி எழுந்தது. வெற்றி தோல்வியின் இறுதி முடிவை நெருங்கிக் கொண்டிருந்தது, அன்றைய தினம் நடந்து கொண்டிருந்த இறுதிப் போராட்டம்.

{கர்ண பருவம் முற்றும்)