பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/537

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
535
 

வெளிப்படுத்தின. இதனால் அர்ச்சுனன் உடலில் பல இடங்களில் இரத்தக் காயங்கள் ஏற்பட்டுவிட்டன. அர்ச்சுனனும், அசுவத்தாமனுடைய உடலில் பல காயங்களை உண்டாக்கினான். இருவருடைய தேர்க்குதிரைகளும் அழிந்தன. இருவரும் தரையில் இறங்கிப் போர் செய்தனர். சிறிது நேரத்தில் அசுவத்தாமன் புறங்காட்டி ஓடினான். அவன் உண்மையாகவே புறங்காட்டி ஓடுவதாக எண்ணிக் கொண்டிருந்த அர்ச்சுனன் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டு அஜாக்கிரதையாக இருந்தான்.

அசுவத்தாமன் அப்போது ஓடுவது போல் பாசாங்கு செய்துவிட்டுக் குபீரென்று திரும்பி ஒரு பெரிய இரும்பு உலக்கையை எடுத்து அர்ச்சுனன் மேல் எறிந்தான். ஆனால் உடனே அர்ச்சுனன் அதைத் தன் அம்புகளால் தடுத்து முறித்துவிட்டான். அடுத்து ஒரு பருமனான கதாயுதத்தை எடுத்து அர்ச்சுனன் மேல் எறிந்தான். அதையும் உடைத்து விட்டான் அர்ச்சுனன். கடைசியில் வேறு வழியின்றிப் புறமுதுகு காட்டி ஓடினான் அசுவத்தாமன். அவன் ஓடிய பிறகு கிருபாச்சாரியன் வந்து அர்ச்சுனனோடு போரிட்டான். அர்ச்சுனன் விரைவில் அவனையும் தோற்று ஓடச் செய்தான். எல்லோரும் தோற்று ஓடிய பின்னர் தன் சகோதரனாகிய வீமனுக்குப் பக்கபலமாகப் போய் நின்று கொண்டான் அர்ச்சுனன்.

சல்லியனுக்கு உதவியாகத் துரியோதனன் வந்து சேர்ந்து கொண்டான். அவன் வந்து சேர்ந்த பின்பு சல்லியனுக்குத் துணிவும் புதிய ஊக்கமும் உண்டாகியிருந்தன. சல்லியனோடு போர் செய்து கொண்டிருந்த சாத்தகியும். நகுலனும் தோற்றனர். சகாதேவனும் தோற்றான். சல்லியனின் ஆண்மையும், ஆற்றலும் பெருகிக் கொண்டே வந்தன. வீமன், தருமன், அர்ச்சுனன் மூன்று பேரும் எதிர்க்கிறபோது தான் ஒருவனாகவே நின்று அவன் அவர்களைச் சமாளித்தான். சல்லியனுடைய அம்புகள் தருமன் முதலியவர்களின் உடலைத் துளைத்தன.