பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/538

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
536
அறத்தின் குரல்
 


சல்லியன் மேல் சினங்கொண்ட வீமன் அவன் தலையில் தரித்திருந்த கிரீடம் கீழே விழுமாறு ஓங்கி தட்டினான். வீமன். இப்படிச் செய்ததைக் கண்டு அதிக ஆத்திரம் அடைந்த துரியோதனன் வில்லை வளைத்து அவன் மேல் அம்பு செலுத்தினான். துரியோதனன் தன்னைத் தாக்குவதைக் கண்ட வீமன் சல்லியனை விட்டு விட்டு துரியோதனன் மேல் பாய்ந்தான். துரியோதனனுக்கும் வீமனுக்கும் போர் ஏற்பட்டது. ஆனால் துரியோதனன் வீமனை எதிர்த்து நிற்கமுடியாமல் விரைவிலேயே தோற்று ஓடினான். துணையிழந்த சல்லியன் தனியாகவே பாண்டவர்களை எதிர்த்துப் போரிட்டான். அவனுக்கு உதவியாக எண்ணற்ற கெளரவப் படை வீரர்கள் அருகிலிருந்தனர், ஆனால் அவன் ஒருவன். பாண்டவர்களோ பலர். தருமன், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என்று இவ்வளவு பேர்களும் ஒன்று திரண்டு சல்லியனை எதிர்த்தார்கள். போர் கடுமையாக நடந்தது. அந்தப் போரில் ஈடுபட்டிருந்த எல்லா வீரர்களுக்கும் உடம்பில் கவசங்களும் கருவிகளும் இருந்தன. ஆனாலும் அந்தக் கவசத்தைக் காட்டிலும் மேலான கவசம் அவர்கள் மனத்தில் இருந்தது. ‘மானம்’ என்ற கவசமும் வீரம் என்ற கருவியும் அவர்கள் மனத்தில் நிறைந்திருந்தன. அவற்றைக் கொண்டு அவற்றிற்கு எதனாலும் பங்கம் வந்து விடாத முறையில் போரிட்டனர் அவர்கள். சல்லியனைக் கொன்று தொலைத்துவிட வேண்டுமென்ற ஆவேசத்தோடு தருமனும், தருமனைக் கொன்று தொலைத்துவிட வேண்டும் என்ற ஆவேசத்தோடு சல்லியனும் போரிட்டனர். தருமனுடைய தேர், குதிரைகள், படைகள் ஆகிய எல்லாவற்றையும் அழித்து அவனை நொடிப் பொழுதிற்குள் வெறுங்கையனாக்கினான் சல்லியன்.

அவமானமடைந்த தருமன் வேறோர் தேரில் ஏறிக் கொண்டு சல்லியனை எதிர்த்தான். ‘சல்லியனைக் கொல்வது அல்லது தானே இறப்பது’ - என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு போரை இம்முறை தருமன் தொடங்கியிருந்தான்.