பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/539

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
537
 

தன் மனத்திலிருந்த கோபத்தை எல்லாம் ஒன்று திரட்டி ஒரு கூரிய வேலை எடுத்துச் சல்லியன் மார்பைக் குறிவைத்து வீசி எறிந்தான் தருமன். அந்த வேல் சல்லியன் மார்பில் பாய்ந்து முதுகை ஊடுருவிச் சென்றது. போர்களம் முழுதும் எதிரொலிக்கும்படி குரூரமாக அலறிக்கொண்டு தேரின் மேல் சாய்ந்தான் சல்லியன். வேல் பாய்ந்த இடத்திலிருந்து குருதி பீறிட்டுக் கிளம்பியது. சில கணநேரம் ஈனஸ்வரத்தில் அரற்றிக்கொண்டு கிடந்த பின் சல்லியன் இறந்துவிட்டான். தங்கள் தலைவனைக் கொன்றதற்காகப் பழிவாங்கும் எண்ணத்தோடு சல்லியனின் நூற்றுக்கணக்கான வீரர்கள் தருமனுடைய தேரைச் சுற்றி வளைத்து நின்று கொண்டார்கள். துரியோதனனும் சகுனி, தன் தம்பியர், முதலியவர்களை அழைத்துக் கொண்டு தருமனை, எதிர்க்க வந்து விட்டான். ஆனால் தருமனுக்கு ஒருவிதமான ஆபத்தும் அவர்களால் ஏற்பட முடியாதபடி வீமன், துட்டத்துய்ம்மன் முதலியவர்கள் உதவிக்கு வந்து சேர்ந்தனர். சோம குலத்து வீர இளைஞர்கள் வேறு உடன் வந்தனர். படைத் தலைவனாகிய சல்லியனைப் பறிகொடுத்த பின்னும் தயங்காமல் எதிர்த்தனர் துரியோதனாதியர்.

ஆனால் அதிகச் சேதம் துரியோதனன் பக்கமே ஏற்பட்டது. துரியோதனனுடைய சகோதரர்களில் எஞ்சியிருந்த ஏழு பேரும் வீமன் கையால் மாண்டு போனார்கள். எஞ்சியிருந்தவர்களில் இன்னும் ஐந்து சகோதரர்களை அழைத்துக்கொண்டு கிருதவன்மன் வீமனை எதிர்ப்பதற்கு வந்தான்.

“வாருங்கள்! வாருங்கள்! ஏழுபேரும் எந்த இடத்திற்குப் போனார்களோ அங்கே உங்களையும் அனுப்புகின்றேன்” - என்று அவர்களை வரவேற்றான் வீமன். சிறிது நேரம் போர் நடந்தது. சித்திரபாகு, பலசேனன், ஜெயசூரன், சித்திரன், உத்தமவிந்து என்னும் பெயர்களையுடைய அந்த ஐந்து சகோதரர்களைத் தவிர மற்றவர்களெல்லோரும் வீமனுக்குப் பயந்து போர்க்களத்தை விட்டே ஓடிவிட்டனர். இந்த ஐவர்