பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

538

அறத்தின் குரல்

மட்டும் மாண்டு போவதற்காகவே வந்தவர்களைப் போல ஓடாமல் நின்று நிலைத்துப் போர் செய்து கொண்டிருந் தார்கள். மிக விரைவிலேயே இவர்களும் விண்ணுலக வாசம் அடையுமாறு கொன்று குவித்தான் வீமன்.

‘அடுத்த பலி நாங்கள்தான்’ என்று சொல்லிக் கொண்டு வருகிறவர்களைப் போல் இன்னும் ஒன்பது சகோதரர்கள் தருமனையும் வீமனையும் எதிர்ப்பதற்காக சகுனியின் தலைமையில் ஓடிவந்தார்கள். வீமன் அவர்களை எதிர்ப்பதற்குத் தயாரானான். வீமனுக்கும் துரியோதனன் தம்பிமார்கள் ஒன்பது பேருக்கும் இடையறாத போர் நடந்தது. முடிவில் முன் சென்றவர்களைப் பின்பற்றி அவர்கள் ஒன்பதின்மரும் உயிரிழந்து போயினர். கூட்டம் கூட்டமாகத் தம்பிகள் சென்றபோதெல்லாம் வீமன் அவர்களை ஒருவர் விடாமல் கொன்று தொலைப்பதை அறிந்ததும் துரியோதனன் மலைத்தான். ‘தன்னுடைய முடிவுகாலம் நெருங்கிவிட்டதோ?’ என்ற அச்சம் அவனுக்கு உண்டாயிற்று. பிரமித்துப் போய் ஒன்றும் செய்யத் தோன்றாமல் உட்கார்ந்து விட்டான் அவன். அந்த நிலையில் அருமை மாமனான சகுனி வந்து துரியோதனனைத் தேற்றி ஊக்கப்படுத்தினான்.

“துரியோதனா! நீ கொஞ்சமும் பயப்பட வேண்டாம். இப்போது உன் சார்பாக நான் வீமனிடம் போருக்குப் போகிறேன். அவனை இலேசில் விடுகிறேனா பார்?” என்று வீறாப்புப் பேசிவிட்டுப் படைகளைத் திரட்டிக்கொண்டு வீமனை எதிர்க்கக் கிளம்பினான் சகுனி. வீமனுக்கும் சகுனிக்கும் போர் தொடங்கிற்று.

“வா? வா! நீ ஒருவன் தான் வரவில்லையென்று எண்ணிக் கொண்டிருந்தேன். உனக்கும் முடிவு காலம் நெருங்கி விட்டது” என்று சிரித்துக்கொண்டே கூறி சகுனியை வரவேற்றான் வீமன். சகாதேவன் வீமனுக்கு உதவியாகப் போரிட்டான். சகுனிக்கு உதவுவதற்காக வந்த துரியோதனன் ஒரு வேலாயுதத்தை எடுத்து சகாதேவன் மேல் எறிந்து விட்டான். அது சகாதேவனை நன்றாகத் தாக்கிவிட்டதனால்