பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

539

அவன் பிரக்ஞை தவறிக் கீழே நிலைகுலைந்து வீழ்ந்து விட்டான். தம்பியைத் துரியோதனன் தாக்கிவிட்டதைக் கண்டு மனம் கொதித்த வீமன் தன் மனக் கொதிப்பையெல்லாம் சகுனி மேல் காட்டினான். சகுனியைக் காப்பாற்றுவதற்காக, துரியோதனனும் அசுவத்தாமனும் பெருமுயற்சி செய்தார்கள். வீமன் அம்புகளை எய்து துரியோதனனை முர்ச்சையுறச் செய்தான். வீமனுக்கு உதவியாக வந்த சோழ மன்னன் எய்த அம்புகள் அசுவத்தாமனைப் பிரக்ஞையிழக்கச் செய்தன. இவர்களெல்லாம் இந்த அவலமடைந்ததைக் கண்டு கிருபாச்சாரியார் எஞ்சியிருந்த கெளரவப் படைகளை அழைத்துக் கொண்டு சோழனை எதிர்த்தார். சோழனோ அவரையும் அவரோடு வந்தவர்களையும் ஓட ஓட விரட்டி அடித்துவிட்டான். இதற்குள் சகாதேவன் பிரக்ஞையுற்று எழுந்திருந்தான். அவனுக்கும் சகுனிக்கும் போர் தொடங்கிற்று. தன்னை வேலால் எறிந்தது போலவே சகுனியின் மேலும் வேலால் எறிய எண்ணினான் சகாதேவன். சகாதேவன் கையில் வேலை எடுத்து, சகுனியின் மார்பைக் குறிவைத்து எறிந்தான். சகாதேவனுடைய அந்தக் குறி தவறவில்லை. சகுனியின் மார்பை இரண்டாகப் பிளந்து வீழ்த்தியது அந்த வேல். சகுனி கீழே விழுந்து இறந்தான். எல்லாச் சூழ்ச்சிகளுக்கும், எல்லா வஞ்சகங்களுக்கும் காரணமாக இருந்த அவனுடைய மரணம் பாண்டவர்களுக்குள் மகிழ்ச்சி உண்டாக்கியது. முன்பு துரியோதனனுடைய சபையில் சகுனியைக் கொல்வதாக அவன் செய்திருந்த சபதமும் நிறைவேறி விட்டது.

ஏற்கெனவே தம்பியரைக் கொல்லக் கொடுத்துவிட்டுத் துயரத்தில் மூழ்கியிருந்த துரியோதனன் சகுனியின் சாவுச் செய்தி கேட்டு ஒரேயடியாக அதிர்ச்சியடைந்து போனான். பெரும் புயல் வீசும் பொழுது நட்ட நடுக்கடலில் மாலுமியில்லாத மரக்கலம் உடைந்து போனாற் போன்ற நிலையை அடைந்தான் அவன்.