பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/543

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
541
 

போருக்குப் பயந்து தோற்று ஓடிவிட்டனா? அல்லது போரில் மாண்டு விட்டானா? - என்றெண்ணிக் கலங்கிய நெஞ்சத்தோடு அவனைத் தேடுவதற்குக் கிளம்பினார்கள். போர்க்களத்தைச் சுற்றியுள்ள பல இடங்களில் கால் கடுக்க அலைந்து பார்த்தும் அவன் அகப்படவில்லை. இப்படி அவர்கள் அலைந்து கொண்டிருந்தபோது சஞ்சய முனிவர் எதிரே வந்தார். அசுவத்தாமன் முதலியவர்கள் தங்கள் கலக்கத்தை அவரிடம் கூறித் துரியோதனனுக்கு என்ன நேர்ந்தது? அவன் எங்கு இருக்கிறான் என்று கேட்டார்கள்.

முக்காலமும் அறியவல்ல அந்த முனிவர் துரியோதனன் இருந்த இடத்தையும் அவன் நிலையையும் உணர்ந்து அவர்களுக்குக் கூறினார்: “அன்பர்களே! நீங்கள் நினைப்பது போல் துரியோதனனுடைய உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. இங்கிருந்து இன்னும் சிறிது தொலைவு சென்றால் ஒரு குளமும் ஆலமரமும் இருக்கும். அக்குளத்தில் துரியோதனன் தவம் செய்து கொண்டிருப்பதைக் காண்பீர்கள். போரில் இறந்தவர்களையெல்லாம் பிழைத்தெழச் செய்து மீண்டும் போர் செய்வதற்கு முயல்கிறான் அவன்.”

“முனிவர் பெருமானே! தாங்கள் இப்போது எங்கிருந்து வருகிறீர்கள்? என்ன காரியமாகச் செல்கிறீர்கள்?” - என்று அவரைக் கேட்டான் அசுவத்தாமன்.

“அப்பா! அதையேன் கேட்கிறாய்? நான் உயிர் பிழைத்து வந்தது கருணை வடிவமான அந்தக் கண்ணன் அருளாலேயே ஆகும். துருபதேயனைப் போன்ற கொடியவர்கள் சிலர் என்னைக் கொல்வதற்கு ஓடிவந்தனர். நல்ல வேளை கண்ணன் வந்து என் உயிரைக் காப்பாற்றினான். இப்போது நான் திருதராட்டிர மன்னனையும் அவன் மனைவி காந்தாரியையும் சந்திப்பதற்காகச் செல்கிறேன்” - என்றார் முனிவர். முனிவருக்கு வணக்கமும், நன்றியும், தெரிவித்துவிட்டு அசுவத்தாமன், கிருபன், கிருதவர்மன் முதலியவர்கள் விரைந்து துரியோதனன் இருந்த இடத்திற்குச் சென்றனர்.