பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

542

அறத்தின் குரல்


அவர்கள் சென்றபோது தண்ணீரின் நடுவே நின்று கொண்டு கண் இமைகளை மூடி ஆடாமல் அசையாமல் நிஷ்டையில் இருந்தான் துரியோதனன். அவர்கள் அவனைப் பெயர் சொல்லி அழைத்தார்கள். இரைந்து கத்தினார்கள். ஆலமரத்து விழுதுகளை அசைத்தும் நீரை அளைந்தும் ஓசை உண்டாக்கினார்கள். என்ன செய்தும் அவனுடைய மோனத்தவத்தைக் கலைக்க முடியவில்லை. அசுவத்தாமன் தன் மனத்திலிருந்த எண்ணங்களையெல்லாம் அள்ளித் கொட்டி ஒரு நீண்ட பிரசாங்கமே செய்து பார்த்தான்: “துரியோதனா! இந்தப் பாண்டவர்களை அழிப்பதற்குத் தவம் வேறு செய்ய வேண்டுமா? இப்போது நான் தற்பெருமை பேசவில்லை. உண்மையாகவே சொல்கிறேன். நான் மனம் வைத்தால் இன்னும் சில நாழிகைப் போரில் அவர்களை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடுவேன். நீ இந்த தவத்தை விட்டுவிடு! வாளேந்திய கைகள் தண்டும் கமண்டலமுமா ஏந்துவது? வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல்! எங்களோடு புறப்பட்டு வா. இன்று சூரியன் அஸ்தமிப்பதற்குள் பாண்டவர்களின் வாழ்வை முடித்துவிடுகிறேன். பின் இந்த உலகம் முழுவதற்கும் ‘ஏகசக்ராதிபதி‘ நீதான்”

அசுவத்தாமனின் இந்த நீண்ட சொற்பொழிவைக் கேட்ட பின்பும் துரியோதனன் கண்களைத் திறக்கவே இல்லை. பழையபடி எதையும் பொருட்படுத்தாத நிஷ்டையிலேயே ஆழ்ந்திருந்தான். “சரி! இனிமேல் இவனைக் கலைக்க முடியாது. வானமே இடிந்து விழுந்தாலும் இவனுடைய நிஷ்டை நீங்காது” - என்றெண்ணிக் கொண்டு அசுவத்தாமன் முதலியோர் வந்த வழியே திரும்பிச் சென்றார்கள். யார் வந்தார்கள்? யார் போனார்கள்? எதற்காக வந்தார்கள்? இவையொன்றுமே தெரியாமல் தன்னுள் இலயித்திருந்தான் துரியோதனன்.

இவர்கள் நிலை இங்கு இவ்வாறிருக்க அங்கே போர்க்களத்தில் எதிரிகள் ஒருவரையும் காணாது வியந்தனர் பாண்டவர். துரியோதனன் எங்கே? அவனுடைய மீதமிருந்த