பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/551

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
549
 


வீமனுடைய கேள்விக்குத் துரியோதனன் சமர்த்தியமாகப் பொய் சொல்லிச் சமாளித்து விட்டான். தன் உயிர் நிலை தனது தொடையிலிருந்தும் அதைச் சொல்லாமல், “வீமா! உன்னைப் போலவே எனக்கும் தலையில் தான் உயிர் நிலை இருக்கிறது” என்று புளுகினான். அதை நிஜமென்று நினைத்துக் கொண்டவீமன் துரியோதனனுடைய தலைமேல் தன் கையால் ஓங்கி ஓங்கி அடித்தான். ஆனால் அந்த அடிகள் துரியோதனனுக்கு உறைத்த மாதிரியே தெரியவில்லை. அவன் சிறிதும் வலியின்றிச் சிரித்துக் கொண்டே ஊக்கம் தளராமல் வீமனை எதிர்த்தான். உண்மையில் எது உயிர்நிலையோ, அங்கே அடிபட்டிருந்தால் தானே வலி, தளர்ச்சி எல்லாம் ஏற்படும்? வீமனுடைய தலையில் துரியோதனனுடைய அடிகள் விழும்போதெல்லாம் அவன் மயங்கி மயங்கிக் கீழே சுருண்டு விழுந்தான். ஆனால் துரியோதனனுடைய தலையில் வீமனுடைய அடிகள் விழும் போது துரியோதனன் மயங்கவுமில்லை; விழவுமில்லை. அருகில் நின்று போரைப் பார்த்துக் கொண்டிருந்த கண்ணன் இதைக் கவனித்தான். துரியோதனன், வீமனை ஏமாற்றிவிட்டான் உன்ற உண்மை அவனுக்குப் புரிந்தது. கண்ணன் தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த அர்ச்சுனனை அழைத்து இரகசியமாக அவன் காதருகே இதைக் கூறினான்:- “அர்ச்சுனா! துரியோதனனுடைய உயிர்நிலை அவன் தொடையில் இருக்கிறது. ஆனால் தலையிலிருப்பதாக உன் அண்ணனிடம் பொய் சொல்லி ஏமாற்றி விட்டான் அவன். இப்போது உண்மையை நாம் வீமனுக்குத் தெரிவித்து விடவேண்டும் நீ ஒரு காரியம் செய்! ஜாடையாக வீமனுக்கு அருகே சென்று குறிப்பினால் உண்மையை அவனுக்குத் தெரிவித்துவிடு” என்று கண்ணன் கூறியபோது, அர்ச்சுனன் அப்படியே செய்வதாக கூறிச் சென்றான். வீமனுக்கு அருகே போய்க் கையால் தொடையைத் தொட்டுக் காட்டிக் கண்ணால் ஜாடை செய்தான் அர்ச்சுனன். அவ்வளவு சொன்னால் போதாதா வீமனுக்கு? துரியோதனனுடைய உயிர்நிலை அவன் பொய்யாகச் சொன்னது போல் தலையில் இல்லை;