பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

551


சிறிது நேரம் இவ்வாறு முனகிக்கொண்டும் கதறிக்கொண்டும் கிடந்தபின், திரும்பவும் வீமனோடு போர் செய்வதற்கு எழுந்தான் துரியோதனன். அவன் எழுந்திருப்பதைப் பார்த்து, “துரியோதனா! உன் உடலில் எழுந்திருப்பதற்குக் கூடவா இன்னும் வலிமை மீதமிருக்கிறது? இதோ பார்! அந்த வலிமையையும் போக்கிவிட்டு மறுவேலை பார்க்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே மீண்டும் அவனைக் கால்களால் உதைத்துக் கீழே தள்ளினான் வீமன்.

“ஐயோ! அப்பா! கொல்கிறானே?” என்று பரிதாபகரமாகச் சப்தமிட்டுக் கொண்டே திரும்பவும் கீழே விழுந்தான் துரியோதனன். வீமன் துரியோதனனைக் குற்றுயிரும் குலையுயிருமாக அடித்துக் கீழே தள்ளுவதைப் பார்த்துக் கொண்டிருந்த பலராமனுக்குக் கோபம் வந்துவிட்டது. துரியோதனனுடைய நிலை கண்டு அவன்மேல் இரக்கம் கொண்டு விட்டான் பலராமன். “அடே வீமா! நிறுத்து உன் சாகஸத்தை. நீங்கள் செய்வது போர் முறைக்குச் சிறிதும் பொருந்தாது. அப்போதிருந்து நடப்பதை எல்லாம் நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். முறை தவறிய போரை யார் செய்தாலும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. என் தம்பியான கண்ணனே இதற்குக் காரணமாக இருந்தாலும் நான் அதை வெறுக்கிறேன். கதைப் போர் செய்வதென்றால் அதற்கு ஓர் ஒழுங்கில்லையா? இடுப்புக்கு மேல் அடிப்பதுதான் கதைப் போர். இடுப்புக்குக் கீழே தொடையில் வீமன் துரியோதனனைத் தாக்கியிருக்கிறான். தட்டிக் கேட்க ஆளில்லை’ என்ற திமிரினால் தான் வீமன் இப்படிச் செய்திருக்கிறான். இதோ இந்த வீமனை நானே அடித்து நொறுக்கிவிடுகிறேன்” என்று ஆத்திரத்தோடு கூறிக்கொண்டே ஓர் இரும்பு உலக்கையினால் வீமனை அடிப்பதற்குத் தாவிப் பாய்ந்தான் பலராமன். அவனுடைய முன்கோபம் பயங்கரமாக இருந்தது. பலராமன் ஓங்கிய உலக்கையின் அடிமட்டும் வீமன்மேல் விழுந்திருக்குமானால் அவன் எலும்புகள் பொடிப் பொடியாக நொறுங்கியிருக்கும்.