பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/554

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
552
அறத்தின் குரல்
 


கண்ணன் குறுக்கே பாய்ந்து தடுத்தனால்தான் வீமன் பிழைக்க முடிந்தது. “அண்ணா! பொறு! கோபப்படாதே. உன்னுடைய முன் கோபத்தால் எல்லா ஏற்பாடுகளும் கெட்டுப் போய்விடும். இவர்கள் பகையில் குறுக்கிடுவதற்கு நீ யார்? இளம் பிராயத்திலிருந்தே இவர்களுக்குள் கொடும்பகை நிலவி வருகிறது. அந்தப் பலநாள் பகையை இவர்கள் தங்களுக்குள் தாங்களே தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். துரியோதனனுக்கு எவ்வாறு சாவு நேரும் என்பது பற்றி மைத்திரேய முனிவர் இட்ட சாபம் உனக்கு மறந்து விட்டதா? “துரியோதனனின் தொடை இரத்தத்தைப் பூசினாலொழியக் கூந்தலை முடியமாட்டேன்’ என்று திரெளபதி சபதம் செய்திருக்கிறாள். துரியோதனனைத் தன் கையாலேயே கொன்று முடிப்பதாக வீமனும் சபதம் செய்திருக்கிறான். அந்தச் சபதங்களெல்லாம் நிறைவேறியாக வேண்டாமா? நீயும், விதுரனும் தீர்த்த யாத்திரை சென்று விட்டு இப்போது தான் திரும்பி வருகிறீர்கள். கழிந்துபோன பதினேழு நாட்களாகப் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் நடந்த போரைப் பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாது. வீமன் துரியோதனனைக் கதாயுதத்தால் அடித்து விட்டதைப் ‘பெரிய வஞ்சகம்’ என்று கூறிக் குமுறுகிறாய் நீ! கடந்த பதினேழு நாட்களில் பாண்டவர்களுக்கு எதிராகத் துரியோதனன் செய்திருக்கும் அளவற்ற வஞ்சகங்களை நீ பார்த்திருந்தால் இப்படிப் பேசவே மாட்டாய், சிவேதன், அபிமன்னன் போன்ற பாண்டவர் தரப்பு வீரர்களையெல்லாம் துரியோதனன் வஞ்சகத்தினாலேயே கொன்றிருக்கிறான். அத்தகைய துரியோதனனை எதிர்த்து வீமன் எப்படிப் போர் புரிந்தாலும் தகும். ஆகவே அண்ணா நீ இதில் தலையிட்டுக்கொள்வது சிறிதும் பொருந்தாது” என்று பலராமனைத் தடுத்தான் கண்ணன். வீமனை அடிப்பதற்காக ஓங்கிய பலராமனின் கைகள் தயங்கின. இரும்பு உலக்கை கீழே விழுந்தது. பேசாமல் தலை குனிந்தவாறே அந்தத் தோட்டத்திலிருந்தே வெளியேறிவிட்டான் அவன்.