பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

அறத்தின் குரல்

மரியாதையையும், அன்பான வரவேற்பையும் ஏற்றுக் கொண்டு அவையோர்க்கு நன்றி கூறினார். நன்றி கூறியவர், அப்படியே தம்முடைய வாழ்வில் தம்மைப் பெரிதும் பாதித்த நிகழ்ச்சி ஒன்றையும் கூறத் தொடங்கினார்.

“இளமையில் குருகுல வாசம் செய்யும் போது நானும் பாஞ்சால நாட்டு இளவரசன் யாகசேனனும் அங்கிலேசர் என்னும் முனிவரிடம் இருந்தோம். எனக்கும் யாகசேனனுக்கும் அப்போது நெருங்கிய நட்பு இருந்தது. உயிர் நட்பு என்றே அதனைச் சிறப்பித்துக் கூறலாம். ஒரு நாள் நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது, ‘என் தந்தையின் மறைவுக்குப் பின் அரசாட்சி எனக்குக் கிட்டும். அப்போது என் அரசில் ஒரு பகுதியை உனக்கு மனமுவந்து அளிப்பேன் நீயும் என்னைப் போல வளமான வாழ்க்கையை அடையலாம்’ என்றான். அப்போது அவன் கூறிய இச்சொற்களை நான் உறுதியாக நம்பினேன். பின்பு சில நாட்களில் பாகசேனனுடைய தந்தை மறைந்து விடவே அவன் நாடு சென்று விட்டான். நானும் குருகுல வாசம் முடிந்தபின் இப்போது இதே அரசகுமாரருக்கு ஆசிரியராக இருக்கும் கிருபாச்சாரியாருடைய தங்கையை மணந்து கொண்டு இல்லறத்தில் பிரவேசித்தேன். நாளடைவில் என் இல்லற வாழ்வின் போக்கில் நான் யாகசேனனையும் அவன் கூறிய உறுதி மொழிகளையும் ஒருவாறு மறந்து போனேன். காலம் வளர்ந்தது. எங்களுக்கு ஒரு புதல்வன் பிறந்தான்.

அவன் பிறந்தபோது எங்கள் வாழ்வில் வறுமை பெரிய அளவில் குறுக்கிட்டிருந்த காலம். உண்பதற்குப் பாலும் அளிக்க முடியாத துயரநிலை, ‘வேதனையை மிகுவிக்கும் இந்த வறுமையை நீக்கிக் கொள்ள என்ன செய்யலாம்’ என்று மனம் மயங்கிச் சிந்தித்தேன் நான். அப்போது எனக்கு யாகசேனனுடைய இளமைப் பருவத்து நட்பும் உறுதி மொழிகளும் நினைவிற்கு வந்தன. தன் அரசாட்சியிலேயே ஒரு பகுதியை அவன் எனக்குத் தருவதாகக் கூறியிருந்த சொற்களை எண்ணினேன். உடனே நம்பிக்கையோடு பாஞ்சால்