பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

561

பூஞ்சோலையில் ஒரு குற்றவாளியாகச் செத்துக் கொண்டிருக்கிறான் என்று அவர்களிடம் சொல்” - இதற்குமேல் துரியோதனனால் பேச முடியவில்லை. தொண்டை அடைத்தது. கண் விழிகள் பிதுங்கின. அவன் இரு கைகளையும் தூக்கிச் சஞ்சயனுக்கு நமஸ்காரம் செய்தான். சஞ்சயனுக்குக் கண்களில் நீர் துளித்தது. துரியோதனனுடைய மரணத்தைக் கண்களால் காண விருப்பமில்லாதவனாய் அங்கிருந்து புறப்பட்டு அத்தினாபுரிக்குச் சென்றான் அவன். துரியோதனனுடைய பெற்றோரான திருதராட்டிரனுக்கும் காந்தாரிக்கும் மரணச் செய்தியைத் தெரிவித்து ஆறுதல் கூறினான். துரியோதனன் அந்திம காலத்தில் நெஞ்சுருகிக் கூறிய செய்திகளையும் அவர்களிடம் எடுத்துரைத்தான்.

இஃது இவ்வாறிருக்கத் துரியோதனனால் வெறுக்கப்பட்டு வியாசர் ஆசிரமத்தை அடைந்த அசுவத்தாமன் முதலிய மூவரும் வியாச முனிவரை வணங்கி நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் அவரிடம் கூறினர். எல்லாவற்றையும் கேட்ட அவர் ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டார். “அசுவத்தாமா! நீ செய்த பாசறைப் படுகொலைகள் மகா பாதகம் நிறைந்த செயல்தான். ஆனாலும் நீ என்ன செய்வாய்? உன்னுடைய விதி உன்னைப் பழிகாரனாக்கிவிட்டது. அந்தப் பழியைப் போக்கிக் கொள்வதற்குத் தவம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. நீயும் கிருபாச்சாரியனும் இந்த ஆசிரமத்தில் தங்கி உங்கள் பழி, பாவம் நீங்க வேண்டுமென்று இறைவனை நோக்கி நீண்ட நாள் பெருந்தவம் செய்யுங்கள். கிருதவன்மா அவனுடைய நாட்டுக்குத் திரும்பிச் செல்லட்டும்” என்று யோசனை கூறினார். அந்த யோசனைப்படியே அசுவத்தாமனும், கிருபாச்சாரியனும், தவம் செய்யத் தொடங்கினர். கிருதவன்மன் வியாசரை வணங்கிவிட்டுத் தன் நாட்டிற்குத் திரும்பிச் சென்றான். தவத்தில் மன அமைதியையும் திருப்தியையும் கண்டு சாந்தம் பெற்றான் அசுவத்தாமன். பதினெட்டாம் நாள் போர் முடிந்து பத்தொன்பதாம் நாள்

அ. கு. - 36