பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

563


“பொறுங்கள்! இனி நீங்கள் அசுவத்தாமனைத் தேடிக் கொலை செய்வதால் ஒரு பயனுமில்லை. இப்போது நீங்கள் கொலை செய்வதற்கேற்ற நிலையிலும் அவன் இல்லை. அவன் வியாசருடைய ஆசிரமத்தில் தன் பாவங்களுக்குப் பிராயச்சித்தம் தேடித் தவம் செய்து கொண்டிருக்கிறான்’ என்று கூறி அவர்களைத் தடுத்தான் கண்ணன்.

முதல் நாள் மாலை சமந்தபஞ்சகத்தில் துரியோதனனைச் சந்தித்து அசுவத்தாமன் வாக்குறுதி அளித்தது முதல் பாசறையில் பூதத்திடம் அடிபட்டது, பின்பு இறைவனை எண்ணித் தவம் செய்தது, தவத்தால் அஸ்திரம் பெற்றுப் படுகொலை செய்தது, இளம் பாண்டவர்களைப் பாண்டவர்களாக எண்ணிக் கொண்டு தலைகளை அறுத்துப் போய்த் துரியோதனனிடம் எறிந்தது. துரியோதனன் அசுவத்தாமனை வெறுத்து விரட்டியதுவரை, எல்லா நிகழ்ச்சிகளையும் கண்ணன் பாண்டவர்களுக்குக் கூறினான்.

“நாம் மட்டும் நேற்றிரவு இந்தப் பாசறையில் இருந்திருந்தால் கொலை செய்ய வந்த அசுவத்தாமனைச் சும்மா விட்டிருப்போமா?” என்று கண்ணனை எதிர்த்துக் கேட்டான் வீமன்.

“முடியாது வீமா! நேற்றிரவு இங்கு யார் இருந்திருந் தாலும் அசுவத்தாமனை எதிர்த்திருக்கமுடியாது. அவன் தவம் செய்து பெற்ற அஸ்திரத்தின் பெயர் ‘பாண்டியம்’ என்பது! அதைக் கொண்டு அவன் எவ்வளவு பெரிய பலசாலியையும் கொன்றுவிடமுடியும். அவ்வளவு ஏன்? பாண்டவர்களாகிய நீங்கள் ஐந்து பேரும் பாசறையில் இருந்திருந்தால் கூட உங்கள் தலைகளை அசுவத்தாமன் அறுத்துக் கொண்டு போயிருப்பான். ஆகவே இனிமேல் பேசிப் பயனில்லை. அசுவத்தாமனைப் பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிடுங்கள். துரியோதனனோ இறந்துவிட்டான். மகத்தான இந்தப் பதினெட்டு நாள் யுத்தத்தில் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். அரசாளும் உரிமை உங்களைச் சேர்ந்துவிட்டது.