பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/566

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
564
அறத்தின் குரல்
 

நடந்ததை மறந்து விடுங்கள். இறந்தவர்களைப் பற்றிய கவலைகளை இந்த விநாடியோடு நினைவிலிருந்து அகற்றி விடுங்கள். மேலே நடக்கவேண்டிய நல்ல காரியங்களைப் பற்றிக் கவனியுங்கள்...” என்று நீண்ட அறிவுரை கூறினான் கண்ணன்.

“கண்ணா! நீ மனித நிலையைக் கடந்தவன். பாச பந்தங்களில் சிக்கிக் கொண்டிருப்பது போல் காட்டிக் கொண்டே அவைகளில் சிக்காமல் ஒதுங்கி வாழ்பவன். உன்னால் துன்பங்களைச் சீக்கிரமே மறந்துவிடமுடியும். உற்றார், உறவினர், அண்ணன், தம்பி, பெற்ற மக்கள், யார் இறந்தாலும் அதை மறந்துவிடத் தக்க உறுதியான நெஞ்சு உனக்கு இருக்கின்றது. நாங்கள் சாதாரண மனிதர்கள் தானே? எங்களால் துன்பத்தை அவ்வளவு விரையில் மறந்துவிட முடியுமா? அதுவும் சொந்தப் புதல்வர்களின் உயிரற்ற சரீரங்களைக் கண் முன் கண்ட பின்பும் அழாமலோ, வருந்தாமலோ இருக்க முடியுமா?” என்று மனமுருகிக் கேட்டான் தருமன்.

அதைக் கேட்டதும் கண்ணன் கலகல வென்று சிரித்தான். சிரித்துக் கொண்டே தருமனை நோக்கிக் கூறினான்:- “தருமா! உலகின் நிலையாமையைப் பற்றிய மெய்யுணர்வு இல்லாமையினால் நீ இப்படிப் பேசுகிறாய், இந்த மாபெரும் போரில் இன்றுவரை எத்தனை கோடி உயிர்கள் இறந்திருக்கின்றன? எத்தனை அரசர்கள்? எத்தனை அரச குமாரர்கள்? எத்தனை வீர தீரர்கள் மாண்டிருக்கின்றனர்? - அவர்களுக்கெல்லாம் வருத்தப்படாத நீ இந்த ஐந்து புதல்வர்களுக்காக மட்டும் நெஞ்சு குலைந்து அழுவது ஏன்? உன் மக்கள் என்ற பாசம் காரணமாகத்தானே? அப்படியானால் அந்தப் பாசம் எவ்வளவு குறுகிய உருவத்தை உடையதாக இருக்கிறதென்று நீ சிந்தித்தாயா? அகிலாண்ட கோடி ஜீவராசிகளுக்கும் நாயகனான கடவுள் இந்தப் போரில் இறந்த கோடிக் கணக்கான உயிர்களுக்காக எவ்வளவு வருத்தமடைவான்? இவ்வளவிற்கும் காரண பூதனான