பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

565

என்னைப் பார்! வெறும் தேரோட்டியான கண்ணனாக எண்ணிக் கொண்டு பாராதே. உலகமாகிய தேரை ஓட்டும் சர்வேசுவரன் உனக்கு முன் நின்று கொண்டிருக்கிறான் என்று எண்ணிப்பார். இத்தனை கோடி உயிர்களும் மாண்ட இந்தப் போர்க்களத்தை உயிர்களின் நாயகனான நான் எப்படிப் பொறுமையோடு பார்த்துக் கொண்டிருந்தேன்? உலகத்தில் ஜனங்கள் பெருகி விட்டார்கள். ஜனங்கள் பெருகியதோடு தீமைகளும் பெருகிவிட்டன. பூமியின் சுமை அளவுக்கு மீறிக் கனத்துவிட்டது. அந்தச் சுமையை மேலும் மேலும் பெருகவிட்டுக் கொண்டிருந்தால் என்ன ஆகும் தெரியுமா? பிரளயம் ஏற்பட்டுவிடும்! இந்த மாபெரும் குருக்ஷேத்திரப் போர் ஏற்பட்டதற்குக் காரணம் உனக்கும் துரியோதனனுக்கும் நடுவில் இருந்த பகை மட்டுமல்ல. உங்கள் இருவருக்கும் நடுவிலிருந்த பகையைக் கருவியாகக் கொண்டு ஒரு போரை உண்டாக்கி அந்தப் போரின் மூலம் பூமியின் பாரத்தைக் குறைக்க வேண்டுமென்ற என் ஆசையை நான் நிறைவேற்றிக் கொண்டேன். நடந்தது அவ்வளவுதான். இதை நீங்கள் இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். இறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கிரியைகளைச் செய்துவிட்டு அத்தினாபுரத்திற்குப் புறப்படுங்கள். அரசாட்சியைப் பெற்றுக்கொள்வதற்குரிய ஏற்பாடுகளை இனிமேல் நீங்கள் கவனிக்கவேண்டும்” - என்று கூறித் தன் நீண்ட உரையை முடித்தான் கண்ணன். இந்த நீண்ட சொல் மழையினால் தருமன் முதலியவர்களுடைய உள்ளத்திலிருந்த களங்கம் நீங்கிவிட்டது. மனத்தில் தெளிவும் அமைதியும் தோன்றின. இறந்தவர்களுக்காகச் செய்ய வேண்டிய கருமங்களை அமைதியாகச் செய்து முடித்தனர். மக்களை எண்ணி அழுது கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த திரெளபதியைக் கண்ணன் தேற்றினான். “அம்மா! திரெளபதி! சபதப்படி துரியோதனன் தொடையிலிருந்து ஒழுகி குருதியைப் பூசி உன் கூந்தலை முடித்துவிட்டாய். இனி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அழுவதனால் இறந்தவர்கள்