பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
56
அறத்தின் குரல்
 

என்று அரச குமாரர்களைச் சுட்டிக்காட்டி வீட்டுமர் கூறினார். பின்பு துரோணருக்கு அத்தினாபுரியில் தங்குவதற்கு ஏற்ற வசதிகள் செய்து கொடுக்கப் பெற்றன. ஒரு பேரரசனுக்குரிய அந்தஸ்துக்களோடு அவர் மேலான சிறப்புக்கள் செய்யப் பெற்றார். பண்பட்ட ஆசிரியனின் கடமை தனது மனம் பொருந்த, தான் கற்ற கல்வியை மாணவர்க்குச் சிறிதும் ஒளிக்காமல் அளிப்பது ஆகும். பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் துரோணர் கற்பித்த கலைப்பயிற்சி அத்தகையதாக இருந்தது. சகோதரர்களில் அவரவர்கள் அறிவிற்கும் ஆற்றலுக்கும் ஏற்ற கலையைத் தேர்ந்து போதித்தார் அவர்.

விசயன் வில்வித்தையில் தலைசிறந்து விளங்கினான். வில் பயிற்சி என்ற கலை காவிய நாயகர்களில் இராமன் ஒருவனுக்காகவே ஏற்பட்டது என்று கூறுவார்கள். ஆனால் விசயனோ, அவனைப் போன்றே தகுதிபெற்று விளங்கினான் இந்தக் கலையில், விசயனின் ஒப்புயர்வற்ற பெருமைக்கு முன் கௌரவர்கள் கதிரவனுக்கு முன் மின்மினி போலாயினர். நல்ல மாணவன் ஆசிரியரின் உள்ளத்தில் தனித்த அன்பையும் நட்பையும் பெறுவது இயற்கையல்லவா? துரோணர் விசயனின் மேல் அளவற்ற பற்றும் அன்புணர்வும் கொண்டு ஆர்வத்தோடு அவனுக்குக் கற்பித்து வந்தார். நல்ல மாணவன் உடலைப் பின்பற்றும் நிழலைப் போல ஆசிரியனை விட்டு விலகாமல் போற்றிப் பாராட்டி வழிபட்டுக் கற்றுக் கொள்ள வேண்டும். விசயன் துரோணரை அவ்வாறு மதித்து வழிபட்டுக் கற்றான். இஃது இவ்வாறிருக்கும் போது துரோணரால் வில்வீரனாகிய ‘ஏகலைவன்’ என்பவனின் விந்தை மிக்க வரலாறு ஒன்றை இங்கே காண்போம். அவனுடைய தியாகத்தையும் குருபக்தியையும் அறிந்து கொள்வோம்.

ஏகலைவன் ஓர் வேட்டுவன், இளமையில் துரோணர் விற்கலையில் ஒப்பற்ற பேரறிஞர் என்பதைப் பலமுறை பலரிடம் கேட்டு மகிழ்ந்தவன். ‘கற்றால் அவரிடம் வில்