பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
58
அறத்தின் குரல்
 

மனமகிழ்ந்து பயபக்தியோடு அவரை வரவேற்று உபசரித்தான். “எல்லாம் தேவரீர் அருளால் வந்த திறமை ! தாங்களே என்னுடைய ஆசிரியர். மானசீகமாக நுட்பமான விற்கலையைத் தங்களிடமிருந்தே நான் கற்றேன்.” என்றான் ஏகலைவன்.

“அப்படியானால் நீ எனக்கு ஆசிரியர் காணிக்கையாக ஏதாவது அளிக்க வேண்டும் அல்லவா?” - என்றார் துரோணர். ‘தாங்கள் எதனைக் கேட்டாலும் சரி! அதை அளிக்க எளியேன் தயங்க மாட்டேன்’ - என்று ஏகலைவன் பணிவான குரலில் உள்ளன்போடு மறுமொழி கூறினான். “நல்லது! உன் வலது கைக்கட்டை விரலைக் காணிக்கையாகக் கேட்கிறேன். அதை எனக்கு அறுத்துக் கொடு” - என்று துரோணர் கேட்டார். வலதுகைக் கட்டைவிரல் - விற்கலைக்கே இன்றியமையாத உறுப்பு. அந்த விரலை இழந்தபின் ஏகலைவன் கற்ற அத்தனை கலைகளும் பயனற்றுப் போகும். “சுவாமி! வேறு ஏதாவது கேளுங்களேன், தருகிறேன்” என்று ஏகலைவன் கட்டை விரலைக் காணிக்கையாகத் தருவதற்கு மறுத்திருக்கலாம். ஆனால் ஏகலைவன் ஆசிரியரின் உன்னத நிலையை உணர்ந்து வழிபடும் உயரிய பண்பும் தியாகமும் கொண்ட ஆண்மகன். துரோணருக்குக் கட்டைவிரலைத் தர இயலாது என்று அவன் மறுக்கவில்லை! அவர் கேட்ட மறுவிநாடியே கட்டைவிரலை அறுத்துக் குருதியொழுகும் கரத்தினால் அவர் திருவடிகளில் வைத்து வணங்கினான். துரோணர் திகைத்தார். ஏகலைவனது பண்பு அவரைவியக்கச் செய்தது. அவனுடைய உயர்ந்த பண்பு நிறைந்த உள்ளம் அவருக்கு அப்போதுதான் புலனாயிற்று. அவர் அவனைப் பாராட்டி வாழ்த்தினார்.

ஏகலைவனுக்குப்பின் அர்ச்சுனன் ஒருவனிடமே அவர் மெய்யான வில்வித்தையின் திறமையைக் காணமுடிந்தது. அர்ச்சுனன் மேல் ஒரு தந்தைக்கு மகன் மேல் ஏற்படும் பாசமும் அன்பும் அவருக்கு ஏற்பட்டது. ஆனால் துரியோதனாதியர் அர்ச்சுனன் மேல் அளவற்ற பொறாமை கொண்டிருந்தனர்.