பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

59


துரோணரே இதை அறிந்து கொண்டார். மெய்யான திறமை அவனுக்கு இருக்கும் போது காரணமின்றி இவர்கள் பொறாமைப்படுவது விருப்பு வெறுப்பற்ற ஆசிரியராகிய அவர் மனத்தையே மிகவும் வாட்டியது. அர்ச்சுனனின் திறமையை மற்றவர்கள் அறிந்து கொள்ளும்படியான சில சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி பார்த்தாவது அவன் மேல் அவர்கள் பொறாமைப்படுவது குறையலாம் என்று எண்ணி அதற்கு ஏற்பாடுகளைச் செய்தார் துரோணர். அவர் ஒருநாள் காலை தம்முடைய மாணவர்கள் யாவரையும் அழைத்துக் கொண்டு கிணற்றுக்கு நீராடச் சென்றார். வேண்டுமென்றே மடுப்போல நீர் ஆழமாக நிறைந்திருந்த அந்தக் கிணற்றில் தம் கைவிரலில் அணிந்திருந்த மோதிரத்தைத் தவறி விழுந்து விட்டது போலப் போட்டு விட்டார். பின்பு மாணவர்களை அழைத்துக் கிணற்றில் இறங்காமலே அம்பு செலுத்தி மோதிரத்தை எடுத்து வருமாறு செய்ய எவராலாவது இயலுமா? என்று கேட்டார். எல்லோருமே, ‘என்னால் முடியும்’ - ‘என்னால் முடியும்’ என்று கூறி முன் வந்து அம்புகளைச் செலுத்திப் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் செலுத்திய அம்புகள் தண்ணீருக்குள் சென்று முழ்கினவே ஒழிய மோதிரத்தை மீட்டுக் கொண்டு வரவில்லை.

இன்னும் ஒரே ஒருவன் மட்டும் அம்பு எய்யவில்லை. அந்த ஒருவன்தான் அர்ச்சுனன் துரோணர் ஏதோ கட்டளையிடுவது போல அர்ச்சுனனைப் பார்த்தார். அர்ச்சுனன் வில்லை எடுத்துச் சாமர்த்தியமாக வளைத்து அம்பைக் கிணற்றுக்குள்ளே செலுத்தினான். என்ன விந்தை? அம்பு மோதிரத்தோடு கிணற்றுக்குள்ளிருந்து மீண்டும் திரும்பவும் மேலே பாய்ந்து வந்தது. கூடியிருந்த மாணவர்கள் யாவரும் அர்ச்சுனனை வைத்த கண் வாங்காமல் ஆச்சரியத்தோடு பார்த்தனர். துரோணர் புன்னகை புரிந்தார். ‘அர்ச்சுனனின் வில் திறமை உங்கள் யாவரினும் சிறந்தது, என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்’ என்று கூறுவது போலிருந்தது அந்தப் புன்னகை. மற்றோர் நாள்! துரோணர்