பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

அறத்தின் குரல்


தம் மாணவர்களுடனே கங்கையாற்றுக்குச் சென்றிருந்தார். கங்கைக் கரையில் அவர் மாணவர்களோடு நீராடிய படித்துறைக்கு அருகில் ஒரு பெரிய அரசமரம் படர்ந்து வளர்ந்திருந்தது. சட்டென்று துரோணர் தம் மாணவர்களின் பக்கமாகத் திரும்பி, “இந்த மரத்திலுள்ள அத்தனை இலைகளையும் துளைக்கும்படியாக ஒரே அம்பைச் செலுத்தக் கூடிய திறமை உங்களில் எவருக்காவது உண்டா ?” - என்று கேட்டார். துரியோதனாதியர் அதைக் கேட்டதுமே மலைத்தனர். வேறு எவருக்கும் வில்லைக் கையிலெடுத்து முயன்று பார்க்கக் கூடத் துணிவில்லை. அர்ச்சுனன் தயங்காமல் வில்லை எடுத்தான். அவன் வில்லிலிருந்து விர்ரென்று அம்பு பறந்ததைத்தான் மற்றவர்கள் காண முடிந்தது. பின் அந்த அம்பு எல்லா இலைகளையும் துளைத்துவிட்டுக் கீழே விழுந்தபோது தான் கண்டவர்களுடைய கண்கள் இமைத்தன!

வேறோர் சமயம் துரோணர் நீராடிக் கொண்டிருக்கும் போது கொடிய முதலையொன்று அவர் காலை இறுகப் பற்றிக் கவ்விக் கொண்டது. உடனே அவர் அலறிக் கொண்டே தம் மாணவர்களைக் கூவி அழைத்தார். எல்லோருமே ஓடி வந்தனர். அவர் காலை முதலையின் பிடியிலிருந்து விடுவிக்க முயன்றார்கள். யாராலுமே அக்காரியத்தைச் செய்ய முடியவில்லை. ஓடி வந்த மாணவர்கள் அத்தனை பேரும் கையில் ஆயுதங்கள் எதுவுமே இல்லாமல் வந்திருந்தார்கள். அர்ச்சுனன் மட்டும் எங்கோ வெளியிற் சென்றிருந்தான். அவனுக்கு இந்தச் செய்தி தெரிந்தபோது வில்லும் அம்புமாக ஓடி வந்து துரோணரை முதலையின் பிடியிலிருந்து விடுவித்தான். தாங்கள் வெறுங்கையர்களாக அவசரத்தில் ஓடி வந்து ஒன்றும் உதவமுடியாமற் போனதற்காக வெட்கித் தலைகுனிந்தனர் மற்றவர்கள் முன்னெச்சரிக்கையாக வில்லும் அம்பும் கொண்டு வந்து ஆசிரியரைத் துன்பத்திலிருந்து விடுவித்த அர்ச்சுனன் திறமையைப் போற்றினர். துரோணரே மனம்