பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

அறத்தின் குரல்

மிகை. நீயே இப்பொழுது என் கைதி என்றால் அரசு எம்மாத்திரம்? எனக்கு நீ கூறியிருந்த அளவு பாதி அரசு போதுமானது! உனக்கு இரங்கி மற்றோர் பாதியரசை உன்னிடமே அளித்து உன்னையும் விடுதலை செய்து அனுப்புகிறேன் நான் பறித்துக்கொள்ள முடியும் உன் வாழ்வை. ஆனால் உன்மேல் கருணை கொண்டு அதை உனக்கே தருகிறேன். போய் வா... அர்ச்சுனா! இவனை விடுதலை செய்து அனுப்பு... பாவம்... அரசவாழ்வை மீண்டும் அடையட்டும்!” என்று துரோணர் கூறினார்.

அர்ச்சுனன் துரோணரை வணங்கி யாகசேனனை விடுதலை செய்தான். அவன் ஒன்றும் பேசாமல் மெளனமாகக் குனிந்த தலையோடு நடந்து சென்றான். அவன் நடந்து சென்ற நடையில்தான் அமைதியிருந்தது. அவன் உள்ளமோ பொங்கிப் புரண்டு அலைபாய்ந்து கொந்தளித்துக் கொண்டிருந்தது. கிரகணத்திற்குப் பின் வெளிப்பட்ட சந்திரனைப் போன்ற கலங்கிய நிலை அவன் மனத்தில் நிலவியது. ஓர் இளைஞனால் தன்னை அவமானப்படுத்திப் பழிக்குப்பழி வாங்கிவிட்ட துரோணரின் செயல் அவனை வதைத்தது. அதே சமயத்தில் தன்னையும் வென்று சிறைப்படுத்திவிடும் அளவிற்கு வீரனான அர்ச்சுனனின் சாமர்த்தியத்தில் அவனுக்கு ஒரு வகையான கவர்ச்சியும் பற்றும் ஏற்பட்டன. அத்தினாபுரியிலிருந்து விடுதலை பெற்று அவன் பாஞ்சால நாட்டிற்கு வந்த பின்பும் துரோணரின் அவமானச் செயலையும் அர்ச்சுனனின் வீரமும் அழகும் விவேகமும் கலந்த சிறப்பையும் அவனால் மறக்கவே முடியவில்லை. துரோணரைப் பற்றி நினைவு எழும் போதெல்லாம் குரூரமான பகைமையே அவன் உள்ளத்தில் பிறந்தது. அர்ச்சுனனைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் ‘அந்த இளைஞனின் மெய்யான வீரத்தைப் பாராட்டி அதற்கு நன்றி செலுத்த வேண்டும்’ என்ற ஆசையே அவன் உள்ளத்தில் அலைமோதியது. ஒன்று பழிவாங்கும் ஆசை! மற்றொன்று பாராட்டும் ஆசை துரோணரைக் கொன்று பழிவாங்கு