பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

69

வதற்காக ஒரு மகன்; அர்ச்சுனனைப் பாராட்டி அவன் வீரத்திற்கு நன்றி செலுத்தும் முகமாகக் கொடுக்க ஒரு பெண். ஆக இரு மக்கள் தனக்கு வேண்டும் என்ற விநோதமான எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது.

இந்த எண்ணமே நாளடைவில் தவிர்க்க முடியாத ஆசையாகவும் வளர்ந்துவிட்டது. இரவு பகல் எந்நேரமும் இந்த ஆசையைத் தழுவி இழையோடிய எண்ணங்கள் இடைவிடாமல் அவன் உள்ளத்தை ஏக்கங்கொள்ளும்படி செய்தன. மக்களைப் பெறுவதற்கு ஓர் வேள்வியைச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து முனிவர்களை அழைத்தனுப்பினான் யாகசேனன். இங்கே நிலைமை இவ்வாறிருக்க அத்தினாபுரியில் பாண்டவர்கள் மேல் துரியோதனாதியரது பொறாமை நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போயிற்று. சிறு வயதில் விளையாடும் போதும் குருகுலவாசம் செய்யும்போதும் பாண்டவர்கள் மேலே இயற்கையாகவே இவர்கள் நெஞ்சங்களில் பகைமை உணர்ச்சி கருக்கொண்டிருந்தது. அப்படிக் கருக்கொண்டிருந்த அந்தப் பகைமை உணர்ச்சி இப்போது வெளிப்படையாகவே பிறந்து சொல்லாலும் செயலாலும் புலப்பட்டது. இந்தச் சமயத்தில் வீட்டுமன், திருதராட்டிரன், விதுரன் முதலிய பெரியோர் தங்களுக்குள் ஒன்று கூடிச் சிந்தனை செய்து தருமனைத் தகுதியுடையவனாகத் தேர்ந்தெடுத்து இளவரசுப் பட்டம் கட்டிவிட்டனர்.

தருமனுக்கு இளவரசுப் பட்டம் கட்டுதற்கு முன்னும் கட்டும்போதும் பேசாமல் இருந்துவிட்ட துரியோதனன் பின்பு மனம் குமுறிப் புழுங்கினான். “நம்மை ஒரு பொருட்டாக மதித்து நமக்கு இளவரசுப் பட்டம் கட்டாமல் தருமனுக்குக் கட்டுவதற்குத் தந்தை மனம் இசைந்திருக்கிறாரே!” என்றெண்ணி அசூயை கொண்டான். கர்ணன், சகுனி முதலிய தோழர்களும் துச்சாதனன் முதலிய பண்பற்ற தம்பிமார்களும் அவனுடைய இந்த அசூயையைப் பெருகச் செய்தார்கள். துரியோதனன் பொறுக்க முடியாத ஆத்திரத்துடன் தன் தந்தையாகிய திருதராட்டிரனை அணுகினான்.